ஈரானில் இரண்டாவது நபர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.
மஜித்ரெஸா ரானாவார்த் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது வாரத்தில் தூக்கிலிடப்பட்டதாக Mizan இணையச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பல மாதங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அவரும் ஒருவர்.
அவர் கத்தியைக் கொண்டு பாதுகாப்புப் படையினர் இருவரைக் கொன்றதாகவும், மேலும் நான்கு பேரைக் காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது.
கடந்த வாரம் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரைக் காயப்படுத்தியதாகக் கூறி மொஹ்சேன் ஷெகாரி (Mohsen Shekari) என்பவரை ஈரான் தூக்கிலிட்டது. ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம்முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாசா அமினி என்ற 22 வயது மாணவி தடுப்புக் காவலில் மாண்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதுவரை 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கலவரத்தில் 450க்கும் அதிகமானோர் மாண்டதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
-smc