குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் முயற்சியைத் தற்காலிகமாக நிறுத்தியது ஜப்பான்

ஜப்பானின் சப்போரோ நகர் 2030ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் முயற்சியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அனைத்து விளம்பர நடவடிக்கைகளும் அதில் அடங்கும்.

தோக்கியோ கோடைக்காலப் போட்டிகளில் நேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் வேளையில் அந்த அறிவிப்பு வந்துள்ளது.

போட்டிகளை ஏற்றுநடத்துவதற்கான புதிய திட்டத்தை வரும் இளவேனில் காலத்தில் உறுதிசெய்ய சப்போரோ நகர அதிகாரிகள் முனைகின்றனர்.

பிறகு அதற்கான பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ள நாடளாவிய கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்துள்ளன. எனவே விளையாட்டுப் போட்டிகள் ஊழலற்ற முறையில் நடத்தப்படுவது முக்கியம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக சப்போரோ நகர மேயர் குறிப்பிட்டார்.

2030 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்றுநடத்த சப்போரோ நகருடன், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City), கனடாவின் வான்கூவர் (Vancouver) ஆகிய நகரங்களும் போட்டியிடுகின்றன.

 

 

-smc