எண்ணெய் விலையில் வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை – ரஷ்யா

மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விலை மீது விதித்திருக்கும் உச்ச வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இம்மாதம் 5ஆம் தேதி நடப்புக்கு வந்த அந்த விலை உச்ச வரம்புக்கு எதிராக ரஷ்யா அறிவித்துள்ள முதல் தடை அது. ரஷ்யாவிடமிருந்து கடல்வழியாகப் பெறப்படும் எண்ணெய்க்கு, ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் கட்டணம் செலுத்தாமல் இருப்பதை எண்ணெய் வர்த்தகர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் வழி, காப்பீடு போன்ற உலகளாவிய விநியோக அம்சங்களுக்காக, மேற்கத்திய நாடுகளின் நிதிச் சேவைகளைப் பயன்படுத்த நிறுவனங்களுக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

ஒப்புநோக்க, மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்துள்ள விலை வரம்புக்கும், தற்போது ரஷ்ய எண்ணெய் விலைக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து, அதனால் விதிக்கப்பட்ட நிதித் தடைகளைச் சரிக்கட்டுவதற்கு, உயர்த்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் விலை உதவியிருந்தது.

ரஷ்யாவின் புதிய நடவடிக்கை குறித்து அதிபர் விளாடிமிர் புட்டின் வெளியிட்ட ஆணை, அரசாங்க இணையப்பக்கத்திலும் அதிபர் அலுவலகப் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

அனைத்துலகச் சட்டத்திற்கு முரணாக நடந்துகொள்ளும் அமெரிக்கா, பிறநாடுகள், அனைத்துலக அமைப்புகள் ஆகியவற்றின் செயல்களுக்குத் தான் விதிக்கும் நேரடியான பதிலடி அது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

 

-smc