பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்ட, கோவிட்-19 தடுப்பூசி வீணாகும் அளவுகள் குறித்து விளக்கம் தேவை என்கிறார் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி.
“ஆறு மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கைவிடப்படுவதாகவும், சிலவற்றை காலாவதியான பிறகு அழிக்க வேண்டும் என்றும் பிரதமர் நேற்று அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.” என்கிறார்.
இது வீணாகவில்லையா?
“இதில் உள்ள இழப்புகள் என்ன? (தடுப்பூசிகளை) யார் ஆர்டர் செய்தார்கள், அதனால் யார் பயனடைந்தார்கள்?” என்ற வினாக்களை புவாட் (மேலே) இன்று காலை தனது முகநூலில் வெளியிட்டார்.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் கோவி ட் -19 தடுப்பூசி பூஸ்டர் அளவை எடுத்துக் கொள்ளுமாறு அன்வார் அறிவுறுத்தினார்.
சுகாதார அமைச்சின் பதிவுகள் இதுவரை 49 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொண்டதாகவும், நாடு முழுவதும் ஆறு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உபரியாக இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
புவாட் இந்த விஷயத்தை விளக்குமாறு சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை வலியுறுத்தியுள்ளார்.
“தடுப்பூசி எடுக்கும் பிரச்சாரம் ஏன் தோல்வியடைந்தது, அதற்கு யார் பொறுப்பு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“பிரதமரே இதை வெளிப்படுத்தியிருப்பதால் அரசாங்கம் இதை விசாரிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.