பெண்கள் உரிமை எங்களுக்கு முக்கியமில்லை – தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு மீது சமீப காலமாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மனித உரிமை மீறல் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை சார்ந்த குற்றச்சாட்டுகள் தாலிபான் அரசின் மீது ஐநா உள்ளிட்ட சர்வதேச சமூகங்கள் முன்வைத்து வருகிறன.

ஆப்கனில் தாலிபான் ஆட்சி அமைத்து சுமார் ஒன்றரை வருட காலம் ஆன நிலையில், பெண்களுக்கு பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறை சட்டங்களையும் தாலிபான் அரசு விதித்து வருகிறது.

பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்ட தடை, பூங்கா மற்றும் கேளிக்கை பகுதிகளுக்கு செல்ல தடை, ஹிஜாப் இல்லாமல் பொதுவெளியில் வர தடை, ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை என பல தடைகளை தாலிபான் விதித்துள்ளது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்து பல்கலைக்கழகங்களை மூடி தாலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக அங்கு 6ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தாலிபானின் இது போன்ற தொடர் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள், ஐநா சபை போன்ற அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றன.

தனது நடவடிக்கை குறித்து தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமான விளக்கம் அளித்துள்ளது. தாலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அளித்த விளக்கத்தில், இஸ்லாமிய அரசு தனது அனைத்து சட்டங்களையும் இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு ஏற்பவே நடைமுறைபடுத்தும்.

ஷரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் அரசு அனுமதிக்காது. எனவே, பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதோ, அவர்களின் உரிமை குறித்த கருத்துக்களோ எங்களுக்கு முக்கியமில்லை என்றுள்ளார். எனவே, சர்வதேச நாடுகள் மத நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

-ift