உக்ரேனியத் தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் மாண்டனர்.
அந்த ஹெலிகாப்டர் பாலர்பள்ளிக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கும் அருகே விழுந்து நொறுங்கியதாகக் கீவ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள். மேலும் 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மரண எண்ணிக்கையை உக்ரேனிய தேசியக் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார். மாண்டோரில் உக்ரேன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரின் முதல் துணை அமைச்சர் இவ்கினி யெனின் ஆகியோர் அடங்குவர்.
42 வயது மொனாஸ்டிர்ஸ்கி 2 பிள்ளைகளுக்குத் தந்தை. அவர் 2021ஆம் ஆண்டு உக்ரேனின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை. விபத்துக்கு பிறகு இணையத்தில் பகிரப்பட்டுள்ள காணொளியில் தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டரில் இருந்து வரும் கரும்புகைக்கு இடையே மக்களின் அழுகுரல்கள் கேட்கின்றன.
விபத்தின்போது பாலர்பள்ளியில் மாணவர்களும் ஊழியர்களும் இருந்தனர். சம்பவ இடத்தில் காவல்துறையினரும் மருத்துவர்களும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
-smc