தைவானியப் பெண்களும் இனி போர்க்காலப் படை வீரர் பயிற்சிக்குச் செல்லலாம்

தைவானிய ராணுவம் முதல்முறையாக அந்நட்டின் பெண்களைப் போர்க்காலப் படை வீரர் பயிற்சியில் ஈடுபடுத்தும் திட்டத்தை அறிவித்தது.

சீனாவிலிருந்து வரும் மிரட்டல்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இது ஒன்றாகும். தன்னாட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஜனநாயக நாடான தைவான் அந்நாட்டில் நடக்கக்கூடிய சீனப் படையெடுப்பு குறித்து அச்சத்தில் வாழ்கிறது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் தேவைப்பட்டால் பலவந்தமாய் அதைக் கைப்பற்றப்போவதாகவும் பெய்ச்சிங் கூறியுள்ளது. சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) ஆட்சியின் கீழும் ரஷ்யா உக்ரேன்மீது போர் தொடுத்தபிறகும் அதே நிலை தைவானுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து சுமார் 200 பணியில் இல்லாத பெண் ராணுவ வீரர்களைத் தன்னார்வ முன்பதிவு பயிற்சியில் சேர அனுமதிப்பதாக தைப்பேயின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்முறையாகப் பெண்களையும் பயிற்சியில் சேர்ப்பதால் இது சோதனைத் திட்டமாக விளங்கும் என்று தற்காப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். போர்க்காலப் படை வீரர் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயிற்சித் திறன்கள் திட்டமிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தைவானில் ஆண்கள் மட்டுமே கட்டாயமாக ராணுவச் சேவைக்கும் போர்க்காலப் படை வீரர் பயிற்சிக்கும் செல்லவேண்டும். பெண்களுக்கு விருப்பமிருந்தால் ராணுவத்தில் சேவையாற்றலாம்.

 

 

-smc