ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன.

பெர்லின், 2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எசன் நகரில் புனரமைப்பு பணிகளுக்கான குழி தோண்டியபோது, 2-ம் உலகப்போரில் அமெரிக்காவால் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்த வெடிகுண்டை பத்திரமாக அகற்றினர். 500 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எசன் மற்றும் அதன் அருகில் உள்ள ஓபர்ஹவுசன் ஆகிய 2 நகரங்களில் இருந்து 3 ஆயிரத்து 300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

-dt