அமெரிக்க துப்பாக்கி சூட்டில் 10 பேரை கொன்ற நபர் தற்கொலை; அரை கம்பத்தில் தேசிய கொடி

அமெரிக்காவில் சீன புதுவருட கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேரை கொன்ற நபரை போலீசார் சுற்றி வளைத்ததும் தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று செயல்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும், 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று, நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

பலர் மேடையில் உற்சாக நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அதிரடியாக பல ரவுண்டுகள் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (வயது 72) என்ற முதியவர் என தெரிய வந்துள்ளது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும், அதுபற்றி தெரிந்து கொண்ட திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியின் ஷெரீப் ராபர்ட் லூனா கூறும்போது, திரான் துப்பாக்கியால் சுட்டு கொண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. இந்த தாக்குதலுக்கான பின்னணி பற்றி தெரிய வரவில்லை. இது இனவெறி தாக்குதலா? என்றும் தெரியவில்லை. அதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

அதுபற்றி கண்காணிப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் பைடன், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அரசு கட்டிடங்களில் உள்ள அனைத்து அமெரிக்க கொடிகளையும் அரை கம்பத்தில் பறக்க விடும்படி உத்தரவிட்டு உள்ளார் என வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தாக்குதலுக்கு பின்னர் 2-வது நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மே மாதத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் கொடிய சம்பவங்களில் ஒன்றாக இருந்தது. கடந்த ஆண்டில் மொத்தம் 647 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன என அதுபற்றிய அந்நாட்டு துப்பாக்கி வன்முறைக்கான தொகுப்பு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-dt