2023 தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, முதியோருக்கான ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனும் பிரச்சார இயக்கத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடங்கவுள்ளது.
கோவிட்-19 கோரணி நச்சுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பிப்ரவரி 5-ஆம் தேதி, தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
கடந்த காலங்களைப் போலவே இந்த ஆண்டும், தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கும் வருகையாளர்களுக்கும் இலவச பானம் வழங்க பேராக் பி.எஸ்.எம். தயாராகி வருகிறது.
ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. முன்புறம், லோட் எண் 148 & 150 கூடாரங்களில், பேராக் பி.எஸ்.எம். தண்ணீர் பந்தல் இடம்பெறும் எனப் பேராக் மாநிலப் பி.எஸ்.எம். தலைவர் கே. எஸ். பவாணி தெரிவித்தார்.
அதே நேரத்தில், அன்றைய தினம், முதியோர் ஓய்வூதியத்தை அமல்படுத்துவதற்கான பிரச்சார இயக்கத்தையும் பேராக் பி.எஸ்.எம். மாநில அளவில் தொடங்கும் என்றார் அவர்.
“முதியோர் ஓய்வூதியத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டுமென்ற இப்பிரச்சாரத்திற்குப் பொது மக்களின் ஆதரவு மிக அவசியம். எனவே, தைப்பூசத்தன்று நாங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் கையெழுத்து சேகரிக்கவுள்ளோம். இந்தப் பிரச்சாரம் அனைத்து மலேசியர்களுக்குமானது, குறிப்பாக வயதானவர்களுக்காக பி.எஸ்.எம். மேற்கொள்ளும் தேசியப் பிரச்சாரமாகும்,” என பி.எஸ்.எம். கட்சியின் துணைச் செயலாளருமான பவாணி கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குழுக்களில் இந்த வயதானவர்களும் அடங்குவர். எனவே, இந்தக் கோரிக்கை பிரச்சாரத்திற்குப் பி.எஸ்.எம். முன்னுரிமை அளிக்கிறது என அவர் சொன்னார்.
“இந்தக் குழுவினர் கோவிட்–19 தொற்று கிருமியால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் இருப்பவர்கள். அது மட்டுமல்லாமல், இவர்களின் பொருளாதார மற்றும் சமூக அம்சங்களும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.”
“அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வலுவான நிதியுதவி இல்லை, மேலும் வயதான காலத்தில் மற்றவர்களின் உதவியை அவர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
“எனவே, முதியோர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பி.எஸ்.எம். கருதுகிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
முதியோர்களுக்கு மாதந்தோறும் RM500 வழங்க வேண்டுமென பி.எஸ்.எம். அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாக பவாணி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நாட்டின் மேம்பாட்டிற்காகவும் சுபீட்சத்திற்காகவும் பாடுபட்ட இந்தக் குழுவினர், பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் கௌரவமாக வாழவும் இந்த ஓய்வூதியம் மிக மிக அவசியமான ஒன்றாக உள்ளது என்றார் வழக்கறிஞருமான கே. எஸ். பவாணி.
“எனவே, எங்கள் தண்ணீர் பந்தலுக்கு வருகை தரும் பக்தர்கள் பானம் அருந்தி தங்கள் களைப்பைப் போக்குவதோடு, இந்தக் கையெழுத்து வேட்டைக்கும் ஆதரவு தரவேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.
இந்தக் கையெழுத்து பிரச்சார இயக்கம், ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மட்டுமின்றி, சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மற்றும் பத்துமலை முருகன் திருத்தலத்திலும் நடைபெறவுள்ளது.
பொது மக்கள் இப்பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவு நல்க வேண்டுமென பி.எஸ்.எம். கேட்டுக்கொள்கிறது.