சிரியாவில் நிலநடுக்கம், வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை

சிரியாவில் நிலநடுக்கம் எதிரொலியாக 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி கூறியுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. எனினும், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன.

இதன் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிக குளிர் சூழ்ந்த காலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, மக்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், துருக்கி மற்றும் சிரியாவில் 8.7 லட்சம் பேருக்கு சூடான உணவு அவசர தேவையாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி சிவாங்கா தனபாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிரியா நாட்டில் 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என தெரிவித்து உள்ளார்.

 

-dt