எங்களது பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வில்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா கவலை

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா ஆசிப் தெரிவித்துள்ளார். சியால்கோட் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் கூறியதாவது.

நாடு கடனை செலுத்த தவறி விட்டது. இதற்கு, அதிகாரிகள், நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவரும் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தான் திவாலான நிலையில் உள்ளது. அந்த உருக்குலைவு ஏற்பட்ட நாட்டில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம். எனவே, பாகிஸ்தானை வலிமையான, நிலையான வகையில் உருவெடுக்கச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

நமது பிரச்சினைகளுக்கான தீர்வு நமது நாட்டுக்குள்தான் உள்ளது. பாகிஸ்தான் பிரச்சினைக் கான தீர்வை சர்வதேச நாணய நிதியத்திடம் தேட முடியாது. மேலும், அதற்கான தீர்வும் அதனிடம் இல்லை.

பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு என்பது கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நாம் குறைந்தபட்சம் கூட மதிக்காமல் செயல்பட்டதன் விளைவு.

இவ்வாறு அமைச்சர் கவஜா ஆசிப் கூறினார்.

பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 3 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் உள்ளது. இது, 10-15 நாட்கள் இறக்குமதிக்கு கூட போதுமானதாக இருக்காது என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டின் முதல் பாதியில் பாகிஸ்தானின் பணவீக்க சராசரி 33%-ஆக இருக்கலாம் என்று மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க

இந்த நிலையில், ஐஎம்எப் மூலம் திரும்ப கடன் பெறுவது மட்டுமே நலிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவாது. தற்போதைய உண்மையான தேவை உறுதியான பொருளாதார மேலாண்மை மட்டுமே என மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பானது3 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் உள்ளது.

 

 

-th