ஆங் சான் சூச் சி தலைமையிலான மியன்மார் எதிர்க்கட்சிக் குழு ஒரு அரசியல் கட்சியாக மீண்டும் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி என்ற கட்சி, வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மியன்மார் பொதுத்தேர்தலை ஜனநாயக விரோதமானது என்று கூறி இக்கட்சி புறக்கணித்ததை அடுத்து அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மியன்மாரில் தற்போது ஆட்சிசெய்யும் இராணுவ ஆதரவு பெற்ற புதிய அரசாங்கம், சீர்திருத்தப் போக்கில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதை அடுத்து, அரசியல் அமைப்புக்குள் மீண்டும் இணைவதற்கான தருணம் இது என்று ஆங் சான் சூச் சி முடிவெடுத்துள்ளார்.
மியன்மாரில் ஒதுக்குப்புறமாகவுள்ள வனப் பிரதேசத்தில் அமைந்துள்ள தலைநகருக்குச் சென்று நேரடியாக தனது அரசியல் கட்சியை ஆங் சான் சூச் சி பதிவுசெய்துள்ளார்.
ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடித்ததற்காக தன்னையும் தனது இயக்கத்தையும் ஒரு காலத்தில் தண்டித்திருந்த பழைய இராணுவ அரசாங்கத்தின் மையத்தில் இருந்த அதே ஆட்கள்தான் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றாலும், இந்த அரசியல் கட்டமைப்புக்குள் சூச் சியும் அவரது கட்சியும் மறுபடியும் நுழைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இராணுவப் பின்னணியில் சிவில் நிர்வாகமாக செயல்படும் மியன்மார் நாட்டின் புதிய அரசாங்கம், வரிசையாக சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த சீர்திருத்தங்கள் வெளிநாட்டு ராஜீய அதிகாரிகளுக்கும் சரி, உள்ளூர் அரசியல் ஆர்வலர்களுக்கும் சரி, ஒரு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த உற்சாகத்தின் விளைவாகத்தான் ஆங்சான் சூச் சியின் கட்சி தற்போது அந்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற அனைத்து தொகுதியிலும் போட்டியிட முடிவுசெய்துள்ளது.
தனிப்பட்ட முறையில் சூச் சியுமே கூட இவ்விடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அரசாங்கம் கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களை நாட்டு மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று மதிப்பிடுவதற்கான ஒரு சோதனையாக இந்த இடைத்தேர்தல்கள் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.