கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுப்பதில் மெத்தனம்? இத்தாலிய முன்னாள் பிரதமர் மீது விசாரணை

இத்தாலிய முன்னாள் பிரதமர் ஜுசெப்பி கான்ட்டே (Giuseppe Conte) நீதித்துறை விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

2020இல் கோவிட்-19 நோய்ப்பரவல் தொடங்கியபோது அதனைக் கான்ட்டேயின் அரசாங்கம் கையாண்ட விதம் குறித்துப் புகார்கள் எழுந்தன.

2018இல் இருந்து 2021 வரை அவர் பிரதமராக இருந்தார். அப்போது நோய்ச்சம்பவங்கள் கணிசமாகப் பரவுவது தெரிந்திருந்தும் அதனைக் கட்டுப்படுத்துவதில் கான்ட்டேயின் அரசாங்கம் மெத்தனம் காட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கான்ட்டேயின் பதவிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவரும் விசாரிக்கப்படுகிறார். தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருந்தால் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இயன்றவரை தமது அரசாங்கம் போராடியது என்றும் விசாரணைகள் பற்றிக் கவலை இல்லை என்றும் கான்ட்டே சொன்னார். உலகின் இதர நாடுகளிலும் இதேபோன்ற புகார்கள் எழுந்தன.

கோவிட்-19 நோய்க்கிருமி உலகம் முழுதும் இதுவரை குறைந்தது 6.8 மில்லியன் பேரின் உயிர்களைப் பறித்துள்ளது.

 

-sm