கிரீஸில் ரயில் விபத்து எதிரொலி, வெடித்தது மக்கள் போராட்டம்

கிரீஸில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் மோதி 43 பேர் பலியான நிகழ்வு, அந்நாட்டு மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் , எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து கிரீஸ் மக்களிடையே கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கிரீஸ் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஏதென்ஸில் உள்ள ஹெலனிக் ரயில் நிலைய தலைமையகத்திற்கு வெளியே மக்கள் பெருள் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

விபத்து குறித்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறும்போது, ”துயரகரமான மனித தவறால் நடந்த விபத்து” என்று தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக லாரிசா ரயில் நிலையத்தில் பணிபுரிந்த 59 வயதான ஸ்டேஷன் மாஸ்டரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணைக்கு கிரீஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்து காரணமாக கிரீஸில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-th