தமிழகம் வந்த மன்மோகன் சிங்குக்கு கடும் எதிர்ப்பு

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகச் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த் தலைமையில் அவரது கட்சியினர் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்வதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், இப் போராட்டத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.

இதே போல சென்னையிலும், சிவகங்கையிலும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் பல்வேறு இடங்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற விடயங்களில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேவேளை தலைமையமைச்சரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். திங்கள் கிழமையன்று திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக கேரளா அமல்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் கேட்டுள்ளனர்.

தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும் அதனால் மேற்கு வங்கத்துக்கு கொடுக்கப்பட்டது போல சிறப்பு நிதியை தமிழகத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று தலைமையமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரியுள்ளார்.