நாளேடு ராமசாமியின் குற்றச்சாட்டை மறுக்கிறது

ஆங்கில நாளேடான த ஸ்டார், பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமி தம் கூற்று திரித்துக் கூறப்பட்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்து தம் செய்தியாளர் சொல்வதே உண்மை என்றும் சாதிக்கிறது.

“பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமியுடனான நேர்காணலை அடிப்படையாக வைத்து எங்கள் செய்தியாளர் இயன் மெக்இண்டயர் எழுதிய செய்திமீது த ஸ்டாருக்கு முழு நம்பிக்கை உண்டு”, என்று அந்நாளேட்டின் அறிக்கை கூறியது.

ஆனால் நேற்று, டிஏபி துணைத் தலைமைச் செயலாளருமான ராமசாமி, அந்நாளேட்டின் செய்தியில் வெளிவந்துள்ளதைப்போல் தாம் செய்தியாளரிடம் எதுவும் கூறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

ராமசாமி தமக்கு எதிராக சதிசெய்பவர்களின் பெயர்களைக்கூட மெக்இண்டயரிடம் தெரிவித்தார் என்றும் “நாகரிகம்” கருதி பெயர்களை வெளியிடவில்லை என்றும் த ஸ்டார் கூறிற்று.

ராமசாமி, நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் த ஸ்டாரில் வெளிவந்த செய்தியை “அடிப்படை அற்றது”,  “அற்பமானது” என்று சாடினார்.

“கட்சியின் உள்விவகாரங்கள் பற்றி செய்தித்தாள்களுடன் ஒருகாலும்  பேச மாட்டேன்”, என்றாரவர்.

செய்தியாளருடனான நேர்காணலுக்கு  ஏற்பாடு செய்தவரே ராமசாமிதான் என்றும் த ஸ்டாரின் அறிக்கை கூறியது.

இதற்குமுன்  தமிழ் நாளேடான மக்கள் ஓசையில் வெளிவந்த ஒரு செய்தியைத் தொடர்ந்து ராமசாமிக்கும் டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்குமிடையில் “காட்பாதர்-வார்லார்ட்’ சர்ச்சை மூண்டது.

அது ஓய்ந்துவந்த வேளையில். டிசம்பர் 23-இல் த ஸ்டாரில் வெளிவந்த செய்தியால் புதுச் சர்ச்சை உருவாகி, ராமசாமி துணை முதல்வர் பதவியிலிருந்து விலக வெண்டும் என்று கர்பால் கோரிக்கை விடுக்கும் நிலை உருவானது.