அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்: வடகொரியா

அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளனர் என வடகொரியா கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் மிக பெரிய அளவில், கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது.

இதன்படி, கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா,ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்து வருகிறது. கடந்த 14-ந்தேதி குறுகிய தொலைவை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா செலுத்தியது. குறுகிய தொலைவில் சென்று இலக்கை தாக்க கூடிய அவை 620 கி.மீ. தொலைவுக்கு சென்றன என தெரிவிக்கப்பட்டது.

வடகொரிய ஏவுகணை பரிசோதனைபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பின்னர் கூறும்போது, வடகொரியா ஏவுகணை பரிசோதனை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதுபற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இந்த பரிசோதனையால் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறினார். 2 ஏவுகணைகளும் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் விழவில்லை என கூறப்படுகிறது.

 

-dt