கரன்சி மதிப்பு சரிந்ததால் பாகிஸ்தானில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை

பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வெளிநாட்டுக்கடன் அதிகரிப்பாலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததாலும், தற்போது அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்தாண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம், நாட்டில் 3-ல் ஒரு பகுதியை மூழ்கடித்தது.

இதனால் சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டாலருக்கு எதிரான பாகிஸ்தான் கரன்சியின் மதிப்பும் வெகுவாக குறைந்ததாலும், பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விற்பனை கொள்கையாலும், மருந்து பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்தன. இதனால் இறக்குமதியாளர்களால் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய முடியவில்லை.

இறக்குமதி: பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இறக்குமதி தடுப்பூசிகள், கேன்சர் மருந்துகள், மயக்க மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

பாகிஸ்தானில் சில மருந்துகள், மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், தடுப்பூசிகள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் போன்றவை இந்தியா, சீனா, ரஷ்யா,ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மருந்து விலைக் கொள்கை 2018 திட்டத்தின் கீழ், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இறக்குமதி மருந்துகளை விநியோகிக்க முடியவில்லை.

கட்டுப்பாடுகளை மறுபரி சீலனை செய்யும்படி பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளை, மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

 

-th