இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட்டதா? இந்திய NGO-களுக்கு நம்பிக்கை இல்லை

ஐந்தாம் படிவ இலக்கிய நூலான இண்டர்லோக் மீதான பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதில் இந்திய NGO-கள் கூட்டமைப்பின் பேராளர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை.

இவ்வாண்டு தொடக்கத்தில் ஒரு பாட நூலாக அறிமுகமான அந்நாவல் குறித்து பல்வேறு தரப்பினரும், குறிப்பாக இந்திய சமூகத்தினர் ஓராண்டு காலமாகக் குறை கூறி வந்ததை அடுத்து கடந்த வாரம் அது மீட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் “அது பற்றி அறிவித்து அது மீட்டுக்கொள்ளப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கும்வரை” அக்கூட்டமைப்பு நம்பிக்கை கொள்ளாது என்று அதன் தலைவர் விக்டர் சுப்பையா கூறினார்.

அந்நாவல் மீட்டுக்கொள்ளப்பட்டு அதனிடத்தில் கொன்சர்டோ தெர்அஹிர் என்ற நாவல் கொண்டுவரப்பட்டிருப்பதாக கல்வி தலைமை இயக்குனர் அப்துல் கபார் மஹ்மூட் அறிவித்தது “அவ்வளவு நம்பிக்கை” தருவதாக இல்லை என்று சுப்பையா குறிப்பிட்டார்.

“அந்நாவல்  மீட்டுக்கொள்ளப்படுவது பற்றி முதலில் மஇகா தலைவர்கள் எஸ்.சுப்ரமணியமும் (துணைத் தலைவர்), ஜி.பழனிவேலும் அறிவித்தனர்.

“அப்போது கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஸார்காசி, முகைதின் அல்லவா அறிவிக்க வேண்டும் இவர்கள்  எப்படி முந்திக்கொண்டு அறிவிக்கலாம் என்று குதித்தார்.சில நாள்கள் கழித்து நாவல் மீட்டுக்கொள்ளப்படுவதாக அப்துல் கபார் அறிவித்தார்”, என்று சற்றுக் குழப்பத்துடன் கூறிய சுப்பையா அந்நாவல் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதைத் துணைப் பிரதமர்(முகைதின்) உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஏனென்றால் இப்போது செய்யப்பட்டுள்ள முடிவு எந்த நேரத்திலும் மாறலாம். அதனால் அதிகாரமுள்ள ஒருவரிடமிருந்து அறிவிப்பு வந்தால்தான் நம்பத்தக்கதாக இருக்கும் என்று சுப்பையா குறிப்பிட்டார்.

“இண்டர்லோக்”குக்கு மாற்றாக “கொன்சர்டோ தெர்அஹிர்”

இண்டர்லோக்குக்கின் இடத்தில் தேசிய இலக்கியவாதி அப்துல்லா உசேனின் கொன்சர்டோ தெர்அஹிர் நாவல் கொண்டுவரப்படுவதாக அப்துல் கபார் கூறினார்.

இண்டர்லோக் நாவலை எழுதியவரும் உசேன்தான். அது, ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர்,ஒர் இந்தியர் ஆகிய மூவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஒரு நாவல்.

அந்த நாவலுக்கு எதிராக இந்திய சமூகம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. அது சமூகத்தை இழிவுபடுத்தும் தொடர்களையும் சொற்களையும் கொண்டிருப்பதாக அது கூறியது.அதற்குப் பொதுமக்களிடையே பரவலான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில திருத்தங்கள் செய்யப்பட்டன. 

ஆனாலும், சீனர்களையும் இந்தியர்களையும் பிரதிநிதிக்கும் அமைப்புகள் அந்நாவலுக்கு அங்கீகாரம் வழங்கிய அரசாங்கத்தைக் குறைகூறியதுடன் அது மீட்டுக்கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஓராண்டுக் காலத்துக்குப் பின்னர் அது மீட்டுகொள்ளப்பட்டது. அது மீட்டுக்கொள்ளப்பட்டதை எல்லாரும் வரவேற்றதாக சொல்ல முடியாது. மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் பெர்காசா அமைப்பு அதைக் குறைகூறியது.பொதுத் தேர்தலில் இந்தியர் வாக்குகளைப் பெறுவதற்காக அது மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய பெர்காசா அதனால் மலாய்க்காரர்களின் கெளரவம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிற்று.