கடந்த சனிக்கிழமை ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அரசமைப்புச் சட்டம் 153 குறித்து கேள்வி எழுப்பிய ஒரு கிறிஸ்துவ சமய குரு மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் உரிமைகளுக்காகப் போராடும் பெர்காசா கேடுக்கொண்டுள்ளது.
ரெவரெண்ட் இயு ஹோங் செங் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றாகும், குறிப்பாக போலீசாரிடமிருந்து, என்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட சமுதாய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்றார் இப்ராகிம் அலி.
“அக்கருத்து குறித்து நாங்கள் (வியாழக்கிழமை) ஒரு போலீஸ் புகார் செய்கிறோம். அது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி தேசநிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“அச்சமய குருவுக்கு எதிராக இசா சட்டம் பயன்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை ஏனென்றால் அது அகற்றப்படவிருக்கிறது. ஆனால், இதன் மீது தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றவர்கள் மீது அமலில் இருக்கும் தேசநிந்தனைச் சட்டம் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்தலாம்”, என்றாரவர்.