ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷியா தோல்வி

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் முக்கியமான 3 அமைப்புகளில் ரஷியா தோல்வியடைந்தது.

ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷியா தோல்வியடைந்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் இடம் பெறுவதற்கான தேர்தலில் ருமேனியாவிடம் ரஷியா தோல்வியடைந்தது. அதேபோல் ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் தேர்தலில் ரஷியா எஸ்டோனியாவிடம் தோற்றது. குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பில் ஆர்மீனியா மற்றும் செக் குடியரசு ஆகியவற்றால் ரஷியா தோற்கடிக்கப்பட்டது.

ரஷியாவின் இந்த தோல்வி உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்ட் கூறினார்.

 

-dt