ஆசிய நாடுகளில் சுட்டெரிக்கும் வெப்பம்

ஆசியாவில் வெப்பநிலை தொடர்ந்து கடுமையாகி வருகிறது.

கடந்த வாரம் பங்களாதேஷில் 60 ஆண்டுகளில் இல்லாத வண்ணம் வெப்பநிலை உச்சத்தை எட்டியது. அங்கு 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாய் வெப்பம் பதிவானது. இந்தியாவில் கடும் வெப்பத்தினால் குறைந்தது 13 பேர் மாண்டுவிட்டனர்.

தாய்லந்தில் இருவர் பலியாயினர். சீனாவின் செஜியாங் (Zhejiang) மாநிலத்தில் இந்த வாரம் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. உலகின் அதிகரிக்கும் வெப்பத்தால் நிலைமை மோசமாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தை விவாதிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உலக வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க நிலைமை தீவிரமாகும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏழை எளியோர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்களுக்குப் போதுமான இடவசதியும், குளிர் சாதன வசதிகளும் இருப்பதில்லை.

 

 

-sm