டிஎபி மாநில செயலாளர் இங்கா கோர் மிங் தொடர்புடைய தையல் நிறுவனத்துடன் வணிகத்தில் ஈடுபடுமாறு ஈப்போ மாநகர் மன்றம் மட்டும் கூறப்படவில்லை என்று ஒரு முன்னாள் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் கூறிக்கொண்டார்.
தங்களுடைய சம்பிரதாய உடைகளை ஈதன் & எல்டன் தையல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்து பேராக் மாநில டிஎபி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூறப்பட்டது. இந்நிறுவனத்தின் பகுதி உரிமையாளர் இங்காவின் மனைவி என்று மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் கேஸ்விண்டர் சிங் கூறினார்.
இந்த உத்தரவு எழுத்து மூலம் தரப்படவில்லை என்றாலும் சட்டமன்றத்திற்கு புதியவர்களான பலர் அதன்படி நடந்து கொண்டனர் என்று கடந்த ஆண்டு டிஎபியிலிருந்து விலகிய கேஸ்விண்டர் மலாய் நாளிதழான பெரித்தா ஹைரியானிடம் கூறினார்.
அவ்வுடைகளுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன என்பதை அவரால் கூற இயலலில்லை ஏனென்றால் அரசுதான் அதற்கான பணத்தைக் கட்டியது என்றும் கேஸ்விண்டர் கூறினார்.
இங்கா இவ்விவகாரத்தை மக்களுக்கு விளக்க வேண்டும் என்ற டிஎபி உதவித் தலைவர் எம். குலசேகரனின் கருத்தைத் தாம் ஆதரிப்பதாக அவர் அந்த மலாய் நாளிதழிடம் நேற்று ஈப்போவில் கூறினார்.
வழக்கை எதிர்கொள்ளத் தயார்
இவ்விவகாரத்தை வெளிப்படுத்திய வலைப்பதிவர் அஹமட் சோபியன் இன்று டிஎபியின் மாநில அலுவலகத்திற்கு போகப் போவதாக அந்நாளிதழிடம் கூறினார்.
“என் மீது வழக்குத் தொடரப் போவதாக இங்கா விடுத்துள்ள சவாலை நான் ஏற்றுக்கொள்வேன். அதற்கான அழைப்பாணையைப் பெற்றுக்கொள்வதற்காக ஈப்போ, மேடான் இஸ்தானாவிலுள்ள டிஎபி அலுவலகத்திற்கு (இன்று) செல்வேன்”, என்று அஹமட் சோபியன் கூறினார்.