சூடானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் வெளிநாட்டு அரசுகள்

சூடானில் சண்டை தீவிரமடைந்திருப்பதால் வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற அவசரமாகச் செயல்படுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் அவற்றின் அரசந்திர அதிகாரிகளை ஏற்கனவே வெளியேற்றிவிட்டன.

ஜப்பான் சூடானில் உள்ள சுமார் 60 பேரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்த்தும்  நகரில் சண்டை தீவிரமடைந்திருப்பதால், அங்கிருந்து வெளியேற முயன்ற பிரஞ்சு குடிமக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அதில் ஒருவர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் தங்களது குடிமக்களை சூடானிலிருந்து வெளியேற்றத் திட்டமிடுகின்றன.

ஸ்பெயின் சுமார் 10 பேரை வெளியேற்றி இருப்பதாகத் தெரிவித்தது. ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70 பேர் அதில் அடங்குவர்.

மலேசியாவைச் சேர்ந்த விமானம் அங்குத் தரையிறங்குவதற்கு ஒப்புதல் கேட்டுக் காத்திருக்கிறது. சூடானில் இம்மாதம் 15ஆம் தேதி ராணுவ தலைவர் அப்துல் ஃபத்தா அல்-புர்ஹானின் படைகளுக்கும் அவரின் முன்னாள் துணை தலைவர் முகமது ஹம்தன் டாக்லோவின் Rapid Support Forces (RSF) எனும் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே சண்டை தொடங்கியது. RSF கிளர்ச்சிக் குழுவைத் திட்டமிட்டப்படி ராணுவத்தில் சேர்ப்பதன் தொடர்பில் சண்டை மூண்டது.

அதில் சுமார் 420 பேர் மாண்டனர். 3,700 பேர் காயமுற்றனர்.

 

 

-sm