கென்யா நாட்டில் மத போதகர் பண்ணை நிலத்தில் தோண்ட, தோண்ட பிணங்கள்- 47 உடல்கள் மீட்பு

போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால் இறைவனை சந்திக்க முடியும் என மத போதகர் பால் மெகன்சி கூறியதாக தெரிகிறது.

கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் கடற் கரையோர பகுதியான மாலிண்டி நகரை சேர்ந்தவர் பால் மெகன்சி. ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதகராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை அங்கு உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி உள்ளனர்.

இந்த பண்ணையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் போலீசில் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் பண்ணைக்கு சொந்தமான நிலத்தை தோண்டினார்கள்.அப்போது போலீசார் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் அணிந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த நிலத்தில் இருந்து தோண்ட,தோண்ட, உடல்கள் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 21 பிணங்கள் கிடைத்தது.

தொடர்ந்து மேலும் 26 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்து இருக்கிறது. அந்த உடல்கள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ் டிக்கவரால் சுற்றப்பட்டு இருந்தது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது. பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால் இறைவனை சந்திக்க முடியும் என மத போதகர் பால் மெகன்சி கூறியதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் பட்டினி கிடந்ததாகவும், இதன் காரணமாக இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் பால் மெகன்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணை நிலத்தில் வேறு யாரும் புதைக்கப்பட்டு உள்ளார்களா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் மேலும் உடல்கள் சிக்கும் என தெரிகிறது. மீட்கப்பட்ட சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும். இந்த சம்பவம் கென்யா நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

 

-mm