25-வது ஆண்டில் காலடி பதிக்கும் மலேசிய சோசியலிச கட்சி  

யோகி – சோசியலிசம் என்பது நாட்டின் வளம் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி  உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம்.

மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே,  எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின் எதிர்ப்பும் கிளம்பிவிடுகிறது.

எந்த அளவுக்கு அதன் எதிர்ப்பு இருந்திருக்கிறது?  கட்சியை பதிவு செய்யவிடாமல் 10 ஆண்டுகளுக்கு அலைக்கழிக்கும் அளவுக்கு. 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கட்சியின் பதிவு போராட்டம் 2008-ஆம் ஆண்டுதான் வெற்றிக்கண்டது என்றால் அதன் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என மக்களே கணித்துக்கொள்ளுங்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்னால்

மலேசிய சோசியலிச கட்சி (ம.சோ.க) 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அப்போதைய அரசாங்கமான  பாரிசான் அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட அலுவலகத்தில் கட்சியின் பதிவுக்கான மனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தது.  விடிந்தால் தொழிலாளர் தினம்.

மறுநாள், ஆங்கிலப் பத்திரிக்கை  ஒன்று “சோசலிசக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை”  என்பதை போல் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டிருந்தது. எத்தனை எத்தனையோ மக்கள் போராட்டங்களை களம் கண்ட இந்த இடதுச்சாரி கட்சியினர் கட்சியின், தமது சொந்த கட்சிக்கான அதிகாரப்பூர்வ பதிவுக்காக போராட்டத்தை கையில் எடுக்கும் நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டனர்.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 10 ஆண்டுகள், கட்சியின் பதிவுக்காக தொடர் போரட்டம் நடந்தவேண்டியிருந்தது. அதாவது இது தொடர்பான நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டதில் அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.  கட்சிப் பதிவின் அதிகாரப்பூர்வ சான்றிதழை ROS வழங்க, அப்போது கட்சியின் செயலாளராக இருந்த அருள்செல்வன் பெற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

பதிவற்ற நிலையும் தோய்வற்ற உணர்வும்

இடைப்பட்டக் காலத்தில் (9 ஆண்டுகள்) கட்சிக்கு பதிவு  இல்லை என்றாலும், கட்சியை வளர்ச்சி நோக்கிய பாதையில் கொண்டு செல்வதிலும், மக்கள் சார்ந்த போராட்டங்களை எந்த தோய்வும் இல்லாமலும் ம.சோ.க. முன்னெடுத்துகொண்டே இருந்தது. மக்களோடு மக்களாக போராட்டக் களத்தில் நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் இடதுசாரி சித்தாங்கள், வலதுசாரி தேசியவாதிகளுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இன்னுமும் அது தொடர்கிறது. அதற்கு சாட்சியாக கூறப்படும் சம்பவம்தான் கட்சியின் பதிவு சம்பந்தப்பட்ட விவகாரமாகும்.

அப்படி என்ன விவகாரம்? 

நாட்டின் அரசியல் அமைப்பும்,  நீதித்துறையும் ம.சோ.க. கட்சியின் பதிவு மறுப்புக்கான வேலையை ஆரம்பத்திலிருந்தே செய்த வண்ணம் இருந்தது. பொதுவாக ஒரு கட்சியையையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்யும்போது,  பதிவுக்கான முடிவினை பதிவு இலாகாதான் மேற்கொள்ள வேண்டும்.

ம.சோ.க பதிவு தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் பாரிசான் அரசாங்கம் நேரடியாக  தலையிட்டு, கட்சி அமைக்கும் சுதந்திரத்திற்கு  முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், அதற்கு ஆதரவான அதாவது பாரிசான் நேஷனல் கட்சிக்கு ஆதவாக செயற்படும் கட்சிகளுக்கு விரைவிலேயே பதிவு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பதிவு மறுக்கப்பட்ட சிறிது நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ம.சோ.க.  ஆனாலும் அதற்கு சாதகமான முடிவு அப்போது கிடைக்கவில்லை. திரும்பவும் இந்த வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியில் 2008-ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அன்று காலையில் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாரிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது. அதில் “மலேசியா சோசலிச கட்சியின்  பதிவுக்கு தடை இல்லை”  கூறப்பட்டிருந்தது.  அதனால் அன்று நடக்கவிருந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் உள்துறை அமைச்சு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு வழக்கு தொடுத்த 10 ஆண்டுகளில், பலதடவை கட்சியின் பதிவுக்கான புதிய  விண்ணப்பத்தை பி.எஸ்.எம் செய்துகொண்டே இருந்தது. அதேபோல 25 ஜூன் 2008-ஆம் தேதியும் உள்துறைஅமைச்சின் ஆலோசனைக்கு இணங்க பி.எஸ்.எம்-இன் புதிய விண்ணப்பத்தை டாக்டர் நசீர் தமது கட்சியின் ஆதரவாளர்களோடு ஷா ஆலாம் மாநகரமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதிகாரப்பூர்வ பதிவு

இரண்டு மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், புத்ராஜெயா ஆர்.ஓ.எஸ் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அப்போது கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்த தோழர் அருள்செல்வன் அந்த அழைப்பை எடுத்தார். “நீங்கள் விண்ணப்பம் செய்திருந்த கட்சியின் விண்ணப்ப பாரம் அங்கீகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வந்து பெற்றுகொள்கிறீர்களா? அல்லது தபாலில் அனுப்ப வேண்டுமா?” என்று தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.

“என்னால் அதை நம்பவே முடியவில்லை. நானே நேரில் வருகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்தேன்” என கட்சியின் பதிவு பாரம் பெறப்பட்ட அந்த நாளை தோழர் அருள்செல்வன்,  Mengapa 10 Tahun untuk daftar PSM என்ற புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

“அந்தப் பதிவு பாரத்தை கண்ணால் கண்டு உறுதி படுத்தும்வரை அத்தகவலை யாருக்கும் நான் சொல்லவில்லை. அதோடு தபால் மூலமாக பாரம் வந்தடையுமா என்று எனக்கு அச்சமாகவும் இருந்தது. 10 ஆண்டுகளாக போராடிய ஒரு விசயம் தற்போது, வெற்றியடைந்து கைக்கும் வரப்போகிறது, என் சூழலே இனம்புரியாத பதட்டமாக மாறியிருந்தது. நான் புத்ராஜெயா சென்றேன். அதிகாரி ஒருவர் வெள்ளை நிறம்கொண்ட கடித உறை ஒன்றை என்னிடம் வழங்கினார். நான் அதை பிரித்துப் பார்த்தபோது 19 ஆகஸ்ட் 2008 மலேசிய சோசலிசக் கட்சி அதிகாரப்பூர்வ பதிவு கண்டது என்ற பதிவு எண்ணோடு உறுதிசெய்யப்பட்ட பாரம் இருந்தது.

நான் அந்த பாரத்தை கடைக்கு கொண்டு சென்று நகல் எடுத்துக்கொண்டேன். அதே கடையில் விற்பனைக்கு இருந்த புகைப்பட சட்டத்தை (photo frame) வாங்கினேன். அது சிவப்பு நிறம் கொண்ட சட்டமாகும். பதிவு பாரத்தை சட்டம் செய்து அதை ஒரு தாளில் பரிசு பொருளை மடிப்பது போல மடித்தேன். பின் அதன் மேல் பி.எஸ்.எம் சின்னத்தை ஒட்டினேன். இன்னும் பதிவு கிடைத்துவிட்ட விஷயத்தை நான் ரகசியமாகவே வைத்திருந்தேன். என் சகாக்களுக்கு நான் இன்ப அதிர்ச்சியளிக்க நினைத்தேன்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பி.எஸ்.எம் அதன் செயற்குழு மற்றும் மாநில செயற்குழுவோடு, தேசிய குழு கூட்டத்தை (national committee meeting) நடத்தும். செப்டம்பர் மாதம் நடந்த அந்தக் கூட்டத்தில் சுமார் 43 தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

நான் கையோடு கொண்டுச் சென்றிருந்த பரிசை அப்போது கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நசீரும், துணைத் தலைவராக இருந்த தோழர் சரஸ் ஆகியோரின் கையில் கொடுத்தேன். அவர்கள் இருவரும் அதைப் பிரித்தனர். டாக்டர் நசீர் “Did we get registered” என்று முதல் வார்த்தையை உதிர்த்தார். தோழர் அனைவரும் உணர்ச்சி பெருக்கெடுத்து HIDUP PSM! HIDUP PSM! என்று முழங்கினர்” என்று தோழர் அருள் அந்தப் புத்தகத்தில் மேலும் விவரித்திருக்கிறார்.

உள்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு ஒப்பாக அன்றைய தினம் மலேசிய சோசலிச கட்சிக்கு கிடைத்த பதிவு தொடர்பான அங்கீகாரமானது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

கட்சியின் பதிவுக்கு முன் நடந்த  பொது தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட சோசலிச வேட்பாளர்கள், அதன் பிறகு  தனது சொந்த சின்னமான இடது கை சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர மலேசிய சோசலிசக் கட்சியின் இந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தோட்டப் புற மக்களுக்கும், நகர முன்னோடிகளுக்கும்  நிறைய திட்டங்களையும், ஆலோசனைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுத்ததிலிருந்து, தனியார் மயமாகவிருந்த அரசாங்க மருந்தக சேவையை போராடி தடுத்ததுவரை முதலாளித்துவத்திற்கு எதிரான பல போராட்டங்களை ம.சோ.க. இன்றுவரை மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறது.

தவிர ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்தின போரணியையும் பல சவால்களுக்கிடையில் ம.சோ.க. நடத்திவருவது இங்கு குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு தனது 25-வது வெள்ளி விழாவைக் கொண்டாடும் ம.சோ.க. கட்சி, அதன் இலக்கை அடைய வேண்டும் என நாமும் வாழ்த்துவோம். வாழ்க பாட்டாளி; வளர்க வர்க போராட்டம்.