சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம்- ராணுவ தளபதிகள் இரு தரப்பும் ஒப்புதல்

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சூடானில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா.சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது குடிமக்களை மீட்டு வருகின்றன.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் தொடர்ந்து சண்டை நடந்தது. இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு ராணுவ தளபதியும், துணை ராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் வழங்கி உள்ளனர். அதன்படி மே 4-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் விவரங்கள், தேதி, இடம் ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

 

-mm