ரிம24மி. மோதிர விவகாரம் உண்மையே, ச்சேகுபார்ட்

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்காக ரிம24.4 மில்லியன் மோதிரம் மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்டது உண்மைதான் என்று சாதிக்கிறார் முன்னாள் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின்.

ரோஸ்மா, ஏப்ரல் 16-இல் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் சென்று “அந்த நீல நிற வைர மோதிரத்தை”ப் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ச்சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் பத்ருல், தாம் அவதூறு பரப்பிவருவதாகக் குற்றம் சாட்டும் ரோஸ்மாவின் ஆதரவாளர்கள் வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரோஸ்மாவின் ஆதரவாளர்கள் முரண்படும் அறிக்கைகளை விடுத்து அவருக்குக் கெடுதலைத்தான் செய்கிறார்கள் என்றாரவர்.

ரோஸ்மாவின் பெயர் சுங்கத்துறை ஆவணத்தில் இருப்பதால் அவர்தான் நியு யோர்கின் முக்கிய வைரநகை விற்பனை நிறுவனமான ஜேக்கப் அண்ட் கம்பெனியில் வாங்கப்பட்ட அந்த மோதிரம் பற்றி விளக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

எம்ஏசிசி-யில் புகார்

கடந்த மாதம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தின் பினாங்கு அலுவலகத்தில் புகார் செய்வதற்குமுன் தம் குற்றச்சாட்டுக்கான “ஆதாரத்தை” அவர் வெளியில் காண்பித்தார்.

“அவர் சுங்கத்துறை அதிகாரி அல்ல, வைரநகை வல்லுனரும் அல்ல.பிறகு ஏன் அவரது பெயர் சுங்கத்துறை ஆவணத்தில் பெறுநர் என்ற இடத்தில் உள்ளது?”, என்று ச்சேகுபார்ட் வினவினார்.

“எனவே, ரோஸ்மாதான் இதை விளக்க வேண்டும். அம்னோ உறுப்பினர்களும் வலைப்பதிவர்களும் உள்ளிட்ட ரோஸ்மா ஆதரவாளர்கள் அமைதியாக இருப்பது நல்லது. இல்லையேல் அவரது நிலைமைதான் மேலும் மோசமாகும்”, என்றவர் வலியுறுத்தினார்.

அன்வார் இப்ராகிமின் முன்னாள் அந்தரங்க செயலாளரான அனுவார் ஷாரி, மோதிரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு மாற்றரசுத் தலைவர்தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பதன் தொடர்பில் ச்சேகுபார்ட் இவ்வாறு கூறினார்.

நேற்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில் அறிக்கை வெளியிட்டிருந்த அனுவார் (இடம்), வைரமோதிரம் வாங்கவில்லை என்று கூறும் ரோஸ்மாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்யும் துணிச்சல் உண்டா என்று பத்ருலுக்குச் சவால் விடுத்திருந்தார்.

ரோஸ்மாவிடம் வைரமோதிர விவகாரம் பற்றி வினவப்பட்டபோது கருத்துரைக்க மறுத்து அதற்குப் பதிலளிப்பதைவிட மக்கள்நலன் தொடர்பான விசயங்களில் கவனம் செலுத்துவது மேல் என்று கூறினார்.

தம் சவாலை ச்சேகுபார்ட் ஏற்கமாட்டார் என்று கூறிய அனுவார், அந்த மோதிரத்துக்கும் ரோஸ்மாவுக்கும் தொடர்பில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும் என்றார். அந்த மோதிரத்தை நியு யோர்கில் வாங்கியவர் மைரா நசர்பயேவ் (வலம்) என்றும் அவர் குறிப்பிட்டார்.

மைரா, ரோஸ்மாவின் சம்பந்தியாகப் போகின்றவர். அவரின் மகனும் கசக்ஸ்தான் அரசில் முக்கிய பதவி வகிப்பவருமான டனியார் நசர்பயேவுக்கும் ரோஸ்மா-நஜிப் ரசாக்கின் புதல்வியான நஜ்வா நூர்யானாவுக்கும் அண்மையில்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை, இந்தோனேசியாவின் பிரபல நாளேடான கொம்பாஸ், ரோஸ்மா வைர மோதிரம் வாங்கிய செய்தியை வெளியிட்டதற்காக   மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தது.

மன்னிப்புத் தெரிவித்துக்கொண்ட அது, கசக்ஸ்தானில் மைரா ரஷ்ய மாஃபியா கும்பலுடன் தொடர்புள்ளவர் என்று பேர்பெற்றவர் என்று  குறிப்பிட்டிருந்தது.

அனுவாருக்கு ரோஸ்மாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் அதற்காகத்தான் அவரைத் தற்காத்துப் பேசுகிறார் என்று ச்சேகுபார்ட் கூறினார்.

“அம்னோவில் எல்லா முடிவுகளையும் மறைமுகமாக செய்பவர் ரோஸ்மாதான் என்பது அனுவாருக்குத் தெரியும். அதனால் ஆதரவு தெரிப்பதன் மூலம் ரோஸ்மாவின் கவனத்தைப் பெற முயல்கிறார்.

“அப்படியாவது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்றவர் எதிர்பார்க்கிறார்.”

ரோஸ்மா ஆதரவாளர்கள் “முரண்பட்ட அறிக்கைகள்” வெளியிடுவதாகக் கூறிய ச்சேகுபார்ட், அவற்றுக்கு எடுத்துகாட்டாக  இன்னொரு அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் அம்மோதிரம் தனியார் கண்காட்சிக்காகக் கொண்டுவரப்பட்டது என்பதைச் சுங்கத்துறையின் புதிய ஆவணங்கள் காண்பிப்பதாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதே வேளை அம் மோதிரம் இப்போது சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

“ஆனால் அனுவார்  சொல்கிறார் அந்த மோதிரம் மைராவுக்குச் சொந்தமானது என்று……. இதில் எது உண்மை?”

தாம் எம்ஏசிசி-யில் புகார் செய்ததை அடுத்து அதன் அதிகாரிகள் விசாரணைக்காக கேஎல்ஐஏ-க்குச் சென்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“இதன் தொடர்பில் ஏ.கிருஷ்ணன் என்பாரை பல மணிநேரம் தடுத்துவைத்து அதிகாலை மூன்று மணிக்குத்தான் விடுவித்திருக்கிறார்கள்.” நம்பத்தக்க வட்டாரங்களிடமிருந்து இதைத் தெரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.

“என் புகாரில் உண்மையில்லை என்றால் எம்ஏசிசி அதிகாரிகள் எதற்காக கேஎல்ஐஏ சென்று விசாரிக்கப் போகிறார்கள்”, என்றவர் வினவினார்.

தம்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை வரவேற்ற ச்சேகுபார்ட், அது ரோஸ்மாவிடமுள்ள “உயர் மதிப்பு”கொண்ட நகைகள் பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

“நான் ஆணவம் பிடித்தவனல்ல அதனால் ‘துணிச்சல் இருந்தால் என்மீது வழக்கு தொடுங்கள்’ என்று சொல்ல மாட்டேன். ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்தால் ரோஸ்மாவின் விலையுயர்ந்த நகைகளை அம்பலப்படுத்த அதை ஒரு வாய்ப்பாகக் கருதுவேன்”, என்றவர் கூறினார்.