பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்து 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லிமா, தென்அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் வழக்கம்போல் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து சுமார் 300 அடி ஆழத்துக்கு அடியில் தோண்டி கொண்டிருந்தபோது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மூச்சுத்திணறல் இந்த தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் சுரங்கத்தை சுற்றிலும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காரணம் என்ன? இதற்கிடையே மீட்பு படையினர் சுரங்கத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 175 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். எனினும் இந்த விபத்தில் சிக்கி 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சுரங்கம் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது. சுரங்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறிய காட்சிகள் தற்போது அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-dt