பாகிஸ்தானில் போராட்டம் நடத்துவோருக்குக் கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானில் போராட்டம் நடத்துவோரைப் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதும், ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும் பயங்கரவாதச் செயல்கள் என்றார். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் எச்சரித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகத் ஷெபாஸ் கூறினார். கானை எட்டு நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

நேற்று முன்தினம் திரு. கான் கைது செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவருடைய சட்டக்குழு மேல்முறையீடு செய்துள்ளது.

பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் கானின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஆறு பேர் மாண்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசாங்கம் ராணுவத்தைக் களமிறக்கியது.

பாகிஸ்தானில் உள்ள சூழலைக் கவனித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய தரப்புகள் கூறியுள்ளன. பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி அவை கேட்டுக்கொண்டன.

 

-sm