ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி உள்ளது.

ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 3 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவற்றை நடத்தினர். எனவே போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து வெளிநாடுகளிலும் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்தது. அதன்படி வெளிநாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களுக்கு முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்தக்கூடாது என ஐ.நா. சபை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் உலக நாடுகளும் ஈரானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.

அதன்பிறகு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி அந்த நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டார். அதேசமயம் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அவ்வப்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள மேலும் 3 பேருக்கு நேற்று ஈரான் அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றியது.

 

-dt