பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது.
இதில் ரஷிய தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போரிட்டது. சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷியாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார். பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம். அந்த நகரின் ஒவ்வொரு வீடும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இனி ஓய்வு எடுப்பதற்காகவும், மறுபயிற்சி பெறுவதற்காகவும் வாக்னர் குழுவினர் வருகிற 25-ந்தேதி பக்முத் நகரில் இருந்து வெளியேறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவலை அவர் ராணுவ உடை அணிந்து ரஷிய கொடி மற்றும் வாக்னர் படையின் சின்னங்களை ஏந்தியவாறு வீடியோவில் பேசி தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் பக்முத் நகரை முழுமையாக ஆய்வு செய்து தேவையான தற்காப்பு கோடுகளை உருவாக்கி அந்த நகரை ராணுவத்திடம் ஒப்படைப்போம் என்று ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.
பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே பக்முத் நகரம் முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். அங்கு உக்ரைன் படையினர் இன்னும் சண்டையிட்டு வருகிறார்கள் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
-mm