தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கடற்படை வாங்கிய ஆறு காவல் படகுகள் பற்றி விளக்கம் தேவையென்றால் கித்தா கட்சி தலைவர் சைட் இப்ராகிம் தம்மை வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
“மேல்விவரங்கள் பெற என்னைச் சந்திக்குமாறு சைட்டை அழைக்கிறேன்”, என்றாரவர்.
அப்படிப்பட்ட வினாக்களுக்கு விளக்கம் அளிக்க தம் அமைச்சு தயாராக இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.அப்போதுதான் தவறான தகவல்கள் அவர்களைச் சென்றடைவது தவிர்க்கப்படும்.
“எங்களிடம் ஒளிவுமறைவு இல்லை. எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு விளக்க விரும்புகிறோம்”, என்று ஜாஹிட் கூறினார்.
கடந்த வாரம் சைட், வெளிநாடுகளிலிருந்து கடற்படைக் கலன்கள் வாங்குவதற்குத் “தொழில்நுட்ப உதவி” வழங்கியதற்காக போஸ்டெட் நேவல் சீப்யார்ட் சுமார் ரிம11 மில்லியன் கொடுத்திருப்பதைக் குறிப்பிடும் விவரச் சிட்டைகளைக் காண்பித்து விளக்கம் கோரியிருந்தார்.
அவை, பிரஸ்ஸல்ஸ், பாரிஸ், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு வங்கிகள் மூலமாக பணம் கொடுக்கப்பட்டதைக் காண்பித்தன.
ஆயுதப் படைக்குச் சொந்தமான போஸ்டெட் நிறுவனம், பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து அக்கலன்களைக் கொள்முதல் செய்தது.
இந்த டிசிஎன்எஸ், மலேசியாவுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக்கப்பல்கள் விற்றது உள்பட பல நாடுகளுக்கு தற்காப்புத்துறை சார்ந்த பொருள்களை விற்பனை செய்ததில் கமிசன் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அதன்மீது பிரான்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி, டோனி புவாவும் தம்மைச் சந்தித்து கடற்படை காவல் படகுகள் வாங்கியது பற்றி தகவல் பெறலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“புவா என்னைச் சந்திக்கலாம். அஞ்ச வேண்டாம். நான் சிங்கமோ முதலையோ அல்ல”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.
ஆறு கலன்களின் விலை ரிம6 பில்லியனிலிருந்து ரிம9 பில்லியனாக உயர்ந்தது ஏன் என்றும் அந்தப் புதிய கலன்கள் இப்போது தேவைதானா என்றும் புவா கேள்வி எழுப்பியிருந்தார்.
மற்றொரு விவகாரம் பற்றியும் பேசிய அஹமட் ஜஹிட், அன்வார் இப்ராகிம் தம் சொந்த விவகாரத்தில் பொதுமக்களை இழுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
தம் குதப்புணர்ச்சி வழக்கு பற்றி விளக்க நாடு முழுக்க புயல்வேக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அன்வாரின் திட்டம் பற்றிக் கருத்துரை அமைச்சர், சட்ட விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது என்றார்.
“மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்கிறார். அப்படியானால் பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும்.”
இவ்விவகாரத்தைத் தெருவுக்குக் கொண்டுசெல்வது “மலேசிய அரசியல் சூழலுக்கு ஏற்புடையதல்ல”, என்றாரவர்.