அடுத்த பெருந்தொற்று கொரோனவை விட மிகவும் மோசமானதாக இருக்கும் – உலக சுகாதார தலைவர் எச்சரிக்கை

அடுத்த பெருந்தொற்று கொரோனா வைரஸை விட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது: கொரோனா வைரஸின் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால், இதன் மூலம் கரோனா வைரஸின் சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மேலும் ஒரு பெருந்தொற்று உருவாகி வருகிறது. இந்த பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

கூட்டாக எதிர்க்க வேண்டும்: எனவே அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் சர்வதேச அளவில் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிவது அவசியம். குறிப்பாக அடுத்த தொற்று நோய் பரவும்போது, அதை கூட்டாக எதிர்த்துப் போரிட நாம் தயாராக இருக்க வேண்டும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இலக்குகளின் கீழ் சுகாதாரம் தொடர்பான இலக்கை அடைவதில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடை பெற்ற உலக சுகாதார கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ‘3 பில்லியன்’ என்ற இலக்கை எட்ட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதாவது, மேலும் 100 கோடி (1 பில்லியன்) மக்களுக்கு உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது, மேலும் 100 கோடி மக்களை சுகாதார அவசர நிலைகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் மேலும் 100 கோடி மக்களுக்கு சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வை உறுதி செய்வது ஆகியவையே 3 பில்லியன் இலக்கு ஆகும். இந்த இலக்கை அடைவதற்கான செயல்பாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

-th

 

 

-th