பாஸ் கட்சியுடன் கூட்டணியா? அன்வார் மறுக்கிறார்

பிரதமர் அன்வார் இப்ராகிம், பாஸ் கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளார்.

“பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அணுகிய  சில கட்சி  தலைவர்கள் ஒத்துழைக்க அழைப்பு விடுத்திருக்கலாம், அது பற்றி எனக்குத் தெரியாது”,என்றார் அன்வார்.

“ஒத்துழைப்பதற்கான முன்மொழிவு பக்காத்தான் ஹராப்பான்-பிஎன் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களால் எழுப்பப்படவில்லை அல்லது விவாதிக்கப்படவில்லை” என்று நேற்று கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தான் கூறியதை மேற்கோள் காட்டினார்.

அரசாங்கத்துடன் ஒத்துழைக்க “சில நபர்கள்” தன்னை அணுகியதாக ஹாடியின் கூற்றுக்கு அன்வார் அவ்வகையில் பதிலளித்தார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

மேல் விவரங்களை வெளியிடாத அந்த மராங் எம்.பி, இது அரசாங்கத்தின் நிலையை மேலும் பலப்படுத்தும், ஆனால் பாஸ்-க்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று சாடினார்.

ஹாடியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இதேபோன்ற கூற்றுக்களை முன்வைத்துள்ளார், அதே நோக்கத்திற்காக அவரையும் சில தரப்பினர் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டினார்.

“(கூட்டணி) அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த வாய்ப்பை வழங்க என்னை சந்தித்தனர்.”

“இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தபடி பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) உடன் உறுதியாக இருப்பேன் என்று நான் வலியுறுத்தினேன், மேலும் நாங்கள் வாக்காளர்களிடம் பொய் சொல்ல மாட்டோம்” என்று கூறினார்.

இந்த குபாங் கெரியன் எம்பியும் கூறப்படும் முன்மொழிவை கேலி செய்தார், ஹராப்பானை விட PN அதிக மலாய் இன  ஆதரவை பெற்றதாக தரவு காட்டுகிறது என்று கூறினார்.

இதேபோல், துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் இதுபோன்ற கூற்றுக்களைக் கூறி “பகல் கனவு காண்பதை நிறுத்துங்கள்” என்று ஹாடியை சாடினார்.