எவரெஸ்ட் சிகரத்தில் மனிதன் ஏறியதன் 70-வது ஆண்டு விழா

உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. ‘இமயமலையை காப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

உலகிலேயே உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் விளங்குகிறது. இதன் உச்சிமுடியை எட்டிப்பிடிப்பது அரிய சாகச செயலாக கருதப்படுகிறது. 1953-ம் ஆண்டு மே 29-ந்தேதியன்று, நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், நேபாள நாட்டின் டென்சிங் நார்கேயும் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர்.

அதன் 70-வது ஆண்டுவிழாவையொட்டி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு உதவும் ஆயிரக்கணக்கான ஷெர்பா இன வழிகாட்டிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். ‘இமயமலையை காப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த பல உள்நாட்டு, வெளிநாட்டு மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கான ஷெர்பா வழிகாட்டிகளும் நேபாள அரசால் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, வெள்ளியாலான, எவரெஸ்ட் சின்னம் பொறித்த ‘பேட்ஜ்’களும் வழங்கப்பட்டன.

எவரெஸ்டில் முதல்முறையாக காலடி பதித்த ஹிலாரி, டென்சிங் குடும்பத்தினருக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹிலாரி கடந்த 2008-ம் ஆண்டும், டென்சிங் கடந்த 1986-ம் ஆண்டும் இறந்துவிட்டனர். அவர்களுக்குப் பின் கடந்த 70 ஆண்டுகளில், பல நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 621 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கின்றனர்.

 

-mm