இளைய வாக்காளர்களைக் கோட்டை விடும் பக்காத்தான்

இராகவன் கருப்பையா – இளைய வாக்காளர்கள் தங்களின் ஆளுமையில் ஒரு அரசியல் பலம் என்பதை உணராத நிலையில்  பக்காத்தான் கட்சிகள், அவர்களின் ஆற்றலை புறக்கணித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றிபெற இயலாமல் போனதற்கு அதன் அலட்சியப் போக்கும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

முன்னாள் பிரதமர் நஜிப் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்னோ வலுவிழந்துவிட்டது என்று எண்ணி அக்கட்சியின் தொகுதிகளைப் பெருவாரியாகச் சுலபத்தில் வாரிவிடலாம் எனும் அலட்சியப் போக்கில் உண்மையான எதிரியைக் கவனிக்கத் தவறிவிட்டது பக்காத்தான்.

அம்னோ வலுவிழந்தது ஏதோ உண்மைதான். ஆனால் அரசியல் வியூகங்களைச் சரியாகக் கையிலெடுத்து, பக்காத்தான் செய்யத் தவறிய ஒரு முக்கியமான பணியைத் திறம்படச் செய்து காரியம் சாதித்தது பாஸ் கட்சிதான் என்றால் அது மிகையில்லை.

அதாவது ‘உண்டி 18′(undi 18) எனும் அடிப்படையில் முதல் முறையாக வாக்களிக்கத் தயாராய் இருந்த இளையோரின் சக்தியைப் பக்காத்தான் மெத்தனமாகக் கருதிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

18 வயதை அடைந்த இளையோர் வாக்களிக்க வகை செய்யும் பொருட்டுக் கடந்த 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. புதிய வாக்காளர்கள் இயல்பாகவே பதிவு பெறுவதற்கும் அச்சட்டத்திருத்தம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து அது செயல்வடிவம் காணும் வரையில் அரும்பாடுபட்டது மூடாக் கட்சி தலைவர் சைட் சாடிக்கும் பக்காத்தான் கூட்டணியும்தான் என்பது யாவரும் அறிந்ததே.

எனினும் மூடாக் கட்சியும் பக்காத்தானின் இதர உறுப்புக் கட்சிகளும் அந்தச் சட்டத்திருத்தத்தின் பயனை அறுவடை செய்யத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை. முதல் முறையாக வாக்களிக்கத் தயாராய் இருந்த ஏறத்தாழ 6 மில்லியன் இளைய வாக்காளர்களைக் கவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அக்கட்சிகள் தவறிவிட்டன.

மூடாக் கட்சி மட்டுமின்றி ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். போன்ற பெரிய கட்சிகளின் இளைஞர் பகுதியினர் போதிய அளவு களமிறங்கி இளையோரை அணுகவில்லை என்றே தெரிகிறது.

அந்த இளைஞர்களை ஒன்று திரட்டிப்  புதிய கிளைகளை அமைக்கவோ இருக்கும்  கிளைகளில் அவர்களை இணைக்கவோ போதுமான அளவு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் பாஸ் கட்சி நாடளாவிய நிலையில் மேகா திட்டங்களைத் தீட்டி இளையோரை, குறிப்பாக நகர் புறங்களுக்கு அப்பால் உள்ளவர்களைச் சுலபத்தில் வசியம் செய்து தன் வசம் ஈர்த்துக் கொண்டது பிறகு தெரிய வந்தது. அக்கட்சியினரின் உழைப்பு வீண்போகவில்லை. வரலாறு காணாத வகையில் அக்கட்சி அடைந்த வெற்றிகள் இதற்குச் சான்று.

இந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று. ஏனெனில் அடுத்த மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதே சூழலைப் பக்காத்தான் எதிர் நோக்கக் கூடும்.

பொதுத் தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்கள் கடவதவிட்ட நிலையிலும் இளையோரை ஈர்ப்பதற்குப் பக்காத்தான் கூட்டணி இன்னமும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. தொகுதி பங்கீடு பற்றியும் வேட்பாளர் தேர்வு பற்றியும் மட்டுமே விவாதிக்கப்படுகிறதே தவிரக் குறைந்த பட்சம் தன் வசம் இருக்கும் மாநிலங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காவது புதிய வாக்காளர்களின் ஆதரவு அவசியம் என்பதை அக்கூட்டணி உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.

இளையோரை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட மூடாக் கட்சியும் இவ்விவகாரத்தில் மெத்தனமாக இருப்பது வியப்பாகத்தான் உள்ளது. துடிப்புமிக்க தலைவரைக் கொண்டுள்ள அக்கட்சி நினைத்தால் இளையோரிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

எனினும் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் அவர்கள் இளையோரை உதாசீனப்படுத்தித்தான் வருகின்றனர் என்பதை அப்பட்டமாகவே உணரமுடிகிறது.

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவின் இளைஞர் பிரிவில் கூட முன்பிருந்த துடிப்பைக் காணமுடியவில்லை. ஒரு காலக்கட்டத்தில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்ததொரு அமைப்பாக விளங்கிய அப்பிரிவு இப்போது ‘பல்லில்லாப் புலி’யூப் போல் தோற்றமளிக்கிறது.

எனவே அடுத்த சில வாரங்களிலாவது இந்நிலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவில்லையென்றால் எதிர்வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அரசாங்கம்  பின்னடைவை எதிர்நோக்கக் கூடும்.