“புரஜெக்ட் ஐசி” விசாணைக்கு அரசு ஆணையம் வேண்டும், டோம்போக்

சாபாவில் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் கள்ள குடியுரிமை ஆவணம் குறித்து ஓர் அரச விசாரணை ஆணயம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆணைய விசாரணை தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று அப்கோவின் தலைவர் பெர்னட் டோம்போக் ஆலோசனை கூறினார்.

தோட்டத் தொழில் மற்றும் பொருள்கள் அமைச்சரான டோம்போக் சாபாவின் நீண்டகால சட்ட விரோத குடியேறிகள் பற்றி மக்களுக்கு ஒரு முடிவைத் தருவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

“ஜனநாயக நடைமுறையைக் கொண்ட ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆகவே, ஒவ்வொருவரும் அவர்களுடையச் சொந்தக் கருத்தைக் கொண்டிருக்க உரிமை பெற்றுள்ளனர்.

“அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டியதின் நோக்கம் மக்கள் அக்கறை கொண்டுள்ள சமுதாய, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவதற்காகும்”, என்று அவர் கோட்ட கினாபாலுவில் இன்று கூறினார்.

அரச விசாரணை ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் மலேசிய சாபா இஸ்லாமிய பொதுநல போதணை மன்றம் (பெக்கீடா) மற்றும் சண்டாக்கானை தளமாகக் கொண்ட ரந்தாவ் புத்ரா மன்றம் குறித்து கருத்து கூறுமாறு அவரை செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

பெப்ரவரி மாதத்தில் தன்னை சுலுவின் 33 ஆவது சுல்தானாக முடிசூட்டிக்கொண்டவரும், வணிகரும், பெக்கீடா சாபாவின் தலைவருமான முகமட் அக்ஜான் அலி முகமட், அரச விசாரணை ஆணையத்தின் வழி நட்டத்தப்படும் புலன்விசாரளைகள் மாநிலத்திலுள்ள பல்வேறு இன மக்களிடையே பகைமையையும், ஒற்றுமையின்மையையும் விளைவிக்கும் என்று கூறினார். ரந்தாவ் புத்ராவை பொறுத்தவரையில் அரச விசாரணை ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.

-பெர்னாமா