தி கியாட்: பாண்டான் தவிர்த்து வேறு இடத்தில் போட்டியிடேன்

தெங்கு ரசாலி ஹம்சா உருவாக்கிய அரசுசார்பற்ற அமைப்பான அங்காத்தான் அமானா ரக்யாட்(அமானா) தம் கருத்துகளைச் சொல்ல ஒரு தளமாக விளங்குவதால்தான் அதில்  சேர்ந்ததாகக் கூறுகிறார் முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட்.

தலைவராக இருந்தபோது அரசியல் வலிமை இருந்தது. 2010-இல் கட்சித் தலைவர் தேர்தலில் தோற்ற பின்னர் எல்லாமே போய்விட்டது என்றாரவர்.

“கருத்துச் சொல்லும் உரிமை உண்டு என்று கட்சித் தலைமை கூறினாலும்….நான் மைய நீரோட்டத்தில் இல்லை என்பதால் என் பேச்செல்லாம் எடுபடாது.” கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் ஒங் தி கியாட் இவ்வாறு கூறினார்.

மைய நீரோட்ட அரசியல் கட்சிகள்போல் அமானாவில் “பழைமையான விதிகளோ கடும் கட்டுப்பாடுகளோ இல்லை”, என்றாரவர்.

ஜூலையில் உருவாக்கப்பட்ட அந்த என்ஜிஓ, “சுதந்திரத்துக்காக போராடியபோது மலேசியரிடையே நிலவிய ஒற்றுமை, ஒரே குடும்பம் என்ற உணர்வை மீண்டும் உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது”.

ஒங்குடன் முன்னாள் சுற்றுலா அமைச்சர் அப்துல் காடிர் ஷேய்க் பாட்சிர், முன்னாள் மஇகா தலைவர் எஸ்.சுப்பிரமணியம், சாபாவின் உப்கோ துணைத் தலைவர் வில்பிரெட் எம்.பும்புரிங், சரவாக்கின் மூத்த அரசியல்வாதி டேனியல் தாஜெம், மலேசிய வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் கே.ரகுநாத், முன்னாள் மலேசிய மனித உரிமை ஆணையர் சைமன் சிபாவுன் முதலியோரும் அதன் மத்தியசெயல்குழு உறுப்பினர்களாவர்.

அமானா, எதிர்காலத்தில் அரசியலில் “மூன்றாம் சக்தியாக” உருவாகும் சாத்தியம் இருப்பதை அவர் மறுக்கவில்லை. அதே வேளை, 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமெல்லாம் அதற்கு இல்லை என்பதையும் ஒங் வலியுறுத்தினார்.

அமானா பற்றி பிஎன் தலைமையின் கருத்து பற்றி வினவியதற்கு இரண்டுக்குமிடையில் இதுவரை எந்தத் தொடர்ப்பில்லை என்று கூறியவர் என்றாலும் அமானாவை அரசாங்கம் “கவனித்து வருவதாகவே” கருதுகிறார்.

தம் எதிர்காலம் பற்றிக் குறிபிட்ட ஒங், பாண்டானில் போட்டியிடுவதையே விரும்புவதாகக் கூறினார். வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிட அவர் விரும்பவில்லை.

“தலைவரே எல்லாவற்றையும் தீர்மானிக்க விட்டுவிட மாட்டேன்….என் விதியை முடிவுசெய்யும் பொறுப்பைக் கட்சிக்குத் தலைவரிடம் விட்டுவிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன்”, என்று  தமக்குப்பின் தலைவரான டாக்டர் சுவா சொய் லெக்கைக் கருத்தில்கொண்டு ஒங் கூறினார்.

“அவர் வேறு திட்டத்தைக் கொண்டிருக்கலாம் அல்லது என்மீது கோபதாபம் கொண்டிருக்கலாம். அதற்கு நான் பலியாகிவிடக் கூடாது.”

பக்காத்தான் ரக்யாட் கட்சி ஒன்று தம்மை  அணுகி கட்சிதாவும்படி கேட்டது என்றும் ஒங் கூறினார். ஆனால், அது பற்றி மேல்விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.