இராகவன் கருப்பையா – நம் நாட்டின் காவல் துறை இவ்வட்டாரத்தின் திறன்மிக்க போலீஸ் படைகளில் ஒன்று என பெயர் பெற்றுள்ள போதிலும் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில்லறைத் தனமான வேலைகள் மக்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது.
ஜோசலின் சியா எனும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மலேசியாவை கிண்டல் செய்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எல்லாருக்கும் தெரியும்.
சிங்கப்பூர் பெண்மணியான அவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மலேசியாவை அவமதித்ததற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய போதிலும் அதைப்பற்றி அவர் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ‘இண்டர்போல்’ எனும் அனைத்துலக போலீஸ் படையின் உதவியை நாடியுள்ளார் நமது காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி.
உள்நாட்டில் எண்ணற்ற குற்றச்செயல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் ஒரு சில்லறை விஷயத்திற்காக அனைத்துலக போலீஸ் படையின் உதவியைக் கோருவது வேடிக்கைதான்.
இந்திரா காந்தியின் சோகக் கதையைப் பற்றி தெரியாதவர் யாரும் நம்மிடையே இருக்க வாய்ப்பில்லை. இஸ்லாம் மதத்தைத் தழுவிய அவருடைய முன்னாள் கனவர் பத்மநாதன், 11 மாத கைக்குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்ஷாவை திடீரென ஒரு நாள் கடத்திச் சென்று காணாமல் போய்விட்டார்.
காவல் துறை அக்குழந்தையை கண்டுபிடித்து இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் இதுநாள் வரையில் அதற்கான முன்னெடுப்பு இல்லை என்பதுதான் உண்மை. பத்மநாதனை கைது செய்ய வேண்டும் எனும் உத்தரவும் கூட பிரபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலேசிய காவல் துறை ஜோசலின் சியாவை தேட முற்படுவது ஏற்புடையதாக இல்லை என இந்திரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அக்ரில் சானியின் போக்கு தமக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாக இந்திரா சாடினார்.
கடந்த 14 ஆண்டுகளாக பல அரசாங்கங்கள் மாறி, காவல் துறைக்கு பல தலைவர்கள் மாறியுள்ள போதிலும் இந்திரா காந்தியின் சோகத்திற்கு ஒரு முடிவு பிறக்காமல் இருப்பது வருந்தத்தக்க ஒன்றுதான்.
சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய காவல் துறையை ‘இண்டர்போல்’ கடிந்து கொண்டது நம் ஞாபகத்தில் உள்ளது.
இந்நிலையில் மற்றோரு சில்லறை விவகாரத்தை அங்கு கொண்டு சென்றுள்ளது நமது காவல் துறை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மலேசியாவை கிண்டலாக பேசிய ஜோசலினை கண்டுபிடித்து அக்ரில் சானி எப்படி குற்றஞ்சாட்டப்போகிறார் என்று தெரியவில்லை.
இதற்கிடையே மலேசிய காவல் துறையின் போக்கு தனக்கு மேலும் அதிகமான விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது என அக்ரில் சானிக்கு சவால் விடும் தோரணையில் ஜோசலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
எனவே நமது காவல் துறை சில்லறை விவகாரங்களில் நேரத்தை வீணடிப்பதை விடுத்து மக்களை நேரடியாக பாதிக்கும் பெரிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும்.