ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேவேளையில் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2-வது நாடு அமெரிக்கா ஆகும்.
ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஈட் ஜஸ்ட் நிறுவனம், சிங்கப்பூ ரில் செற்கை இறைச்சியை விற்கிறது. விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது.
கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது.
இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் கூறும்போது, “அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் அளித்து இருப்பது இறைச்சியை நமது மேஜையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று” என்றார்.
-mm