நீதிபதி “தீர்ப்பைத் திருடினார்” புகார் நிராகரிப்பு

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திருடிப் பயன்படுத்திக்கொண்டார் என்ற புகாருக்கு ஆதாரமில்லை என்று தலைமை நீதிபதி அலுவலகம் இன்று அறிவித்தது.

எனவே வழக்குரைஞர் கர்பாலின் புகார் நிராகரிக்கப்படுவதாக தலைமை நீதிபதியின் தனி அதிகாரி சே வான் சைடி சே வான் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதி அலுவலகத்திலிருந்து கர்பாலுக்கு அதிகாரபூர்வ மறுமொழி அனுப்பப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

கர்பாலின் செப்டம்பர் 29ஆம் தேதியிடப்பட்ட புகார்கடிதம் மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது.

“தலைமை நீதிபதி அலுவலகம் அந்த விசாரணையை நடத்தியது.

“விசாரணையுடன் மேல்முறையீட்டு நீதிபதியுடனும் கலந்து பேசப்பட்டது. அதிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பைத் திருடினார் என்ற கர்பாலின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்ற முடிவுக்கு தலைமை நீதிபதி வந்தார். அதனால் அப்புகார் நிராகரிக்கப்படுகிறது”, என்று சே வான் சைடி கூறினார்.

முன்னதாக, தீர்ப்பைத் திருடிய நீதிபதி, அப்துல் மாலிக் இஷாக், பதவி விலக வேண்டும் என்று டிஏபி தலைவரான கர்பால் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதிபதி, காப்புரிமை விவகாரம் பற்றிய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தபோது சிங்கப்பூர் நீதிபதி ஜி.பி.செல்வத்தின் தீர்ப்பைத் திருடிப் பயன்படுத்திக்கொண்டார் என்று கர்பால் குற்றம் சுமத்தியிருந்தார்.

நீதிபதிக்கு எதிராக தீர்ப்பைத் திருடினார் என்று 2000ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக  புகார் கூறப்பட்டதை அப்போது நடப்பில் சட்ட அமைச்சராக இருந்த ரயிஸ் யாத்திமும் உறுதிப்படுத்தினார்.