கி. சீலதாஸ் – மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் மலேசியா பாழாய்ப் போகும் என்பதே ஒற்றுமை அரசில் பங்குபெறும் எல்லா கட்சிகளின் ஏகமனதான முடிவு எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் தெளிவுபடுத்தியுள்ளார். இனிமேலும் தாமதப்படுத்தாமல் தேவையான, ஆக்ககரமான மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். எப்படிப்பட்ட மாற்றங்களாக இருக்க வேண்டும் என்பதிலும் ஒட்டுமொத்த உடன்பாடு இருப்பதாகவே அவர் கொடி காட்டுகிறார்.
நல்லாட்சி, கையூட்டு ஒழித்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பிரதமர் சட்டமுறை ஆட்சியைக் குறிப்பிடாதது சங்கடமாக இருக்கலாம். ஆனால், நல்லாட்சி என்ற சொல்லில் சட்டமுறை ஆட்சி உள்ளிட்டது என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. பிரதமரின் இந்தக் கருத்து மிக முக்கியமானதாகவே கருத வேண்டும்.
ஏனெனில், இதுகாறும் சட்டமுறை உட்பட்ட நல்லாட்சி, கையூட்டு கலாச்சாரத்துக்கு முழுக்குப் போட வேண்டுமென்ற நடவடிக்கைகளுக்கு உதட்டளவு ஆதரவு இருந்ததே அன்றி உளப்பூர்வமான நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குறை இருந்தது. அது நீடிக்கக்கூடாது என்பதைத்தான் பிரதமர் உறுதிப்படுத்துகிறார்.
கையூட்டின் ஆழமும் அன்வாரின் ஆசையும்
அடுத்து கையூட்டு. இது மிகவும் பயங்கரமான அழிவை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்டது. இந்த உண்மையை இதுவரை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கையூட்டு கலாச்சாரம் நாட்டையே அழித்துவிடும் என்பதற்கு இன்னும் சான்று தேடிக் கொண்டிருப்பது திராணியற்றவர்களின் கையாளாகத்தனம் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். மறுக்க முடியுமா?
கையூட்டு பெருகும்போது பாதிப்புறுவது யார்? மக்கள். கையூட்டுப் பெருச்சாளிகளின் பேராசைக்கு மக்கள் பலிகடாவாகிறார்கள். எப்படி என்று கேட்கலாம். இப்பொழுது நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் எவ்வாறெல்லாம் மக்களின் வரிப் பணத்தைப் பதவியில் இருந்தோர் ஏப்பம் விட்டார்கள் என்பது புலனாகிறது. நாடு பொருளாதாரச் சிக்கலில் துவண்டு விடும்போது மக்கள் மீது வரி விதிக்கப்படும்.
இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் இதை அறிந்து கொள்வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டனர்? இந்த அநியாயம் நீடிக்கலாமா? நீடிக்கவிடலாமா? கூடாது! என்ன செய்யலாம்? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஊழலைத் தடுக்க வேண்டும். அது இயலுமா?
இப்பொழுது இருக்கும் சட்ட நடைமுறைகள் ஒரு வழக்கை இழுக்கடிப்பதற்கு வழி விடுகிறது என்பது உண்மை. ஒரு வழக்கைப் பல ஆண்டுகள் இழுக்கடிக்கலாம். இப்படிப்பட்ட முறை நீதி தன் கடமையைச் செய்ய முடியவில்லை. கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதில்தான் திறமை மிகுந்து காணப்படுகிறது.
கையூட்டு வழக்குகளைச் சாதாரண நீதிமன்றங்களின் முன்பு கொண்டு சென்றால் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காட்டி ஒத்திப்போடுவது இயல்பு. இதில் மாற்றம் காண வேண்டும்.
கையூட்டு வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவற்றை விரைவாக நீதிமன்றத்தில் கொணர்ந்து விசாரிக்க வேண்டும். இதற்காகச் சிறப்பு நீதிமன்றத்தையும் அமைத்து சிறப்பு நீதிபதிகளை நியமித்து வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
அதற்கும் இருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு பிரிவை உருவாக்கி கையூட்டு வழக்குகளைத் துரிதமாக விசாரிக்க வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இது உடனடியான சமுதாய நீதி மருத்துவச் சிகிச்சையாகக் கருதி செயல்பட்டால் நாடு பாழ்நிலைக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் ஒற்றுமை அரசில் இணைந்திருக்கும் பல அரசியல் இயக்கங்கள் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் என்பது உலகமறிந்த கசப்பான உண்மை. இன்று நாட்டு நலனை மனத்திற் கொண்டு யாவரும் இணைந்துச் செயல்பட முடிவெடுத்து இன்று ஒன்றாக இயங்குகின்றனர். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துச் செயல்பட வேண்டுமே அல்லாமல் கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து மன்னிப்பு வேண்டுமெனக் கோருவது ஒற்றுமைக்கு உரமாக விளங்காது.
என்றைக்கு ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று முடிவெடுக்கப்பட்டதோ அப்போதே கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து, புதிய நட்புறவைப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது தானே!
அரசியலில் பழிப்பது, இழிப்பது, ஏளனம் செய்வது, குற்றம் சாட்டுவது யாவும் சர்வ சாதாரணம். பகைமையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நட்பைப் பேண முற்படும்போது பழைய சம்பவங்களை நினைத்துப் புழுங்குவது, இப்பொழுது ஏற்பட்டிருக்கும் நட்பைப் பலப்படுத்த உதவாது.
இப்பொழுது தேவைப்படுவது பரந்த மனப்பான்மை. விட்டுக்கொடுத்து ஒத்துப்போகும் தன்மை யாவும் மெச்சத்தக்க, நாட்டுக்குத் தேவையான நியாயமான அணுகுமுறையாகும். நட்பு கட்சிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டால் அது ஒற்றுமையைக் குலைத்துவிடும்.
மாறாக, உண்மையான எதிரி யார்? அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் என்ன? அவை மக்களைக் கவருமா? அவற்றில் உண்மை உண்டா? நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதில்தான் கவனம் தேவை!
இன்றைய ஒற்றுமை ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் முகைதீன், ஹடி அவாங்கின் இனவாதமும் மதவாதமும் கொண்ட அந்த இரண்டு கட்சிகளின் ஒன்றுபட்ட கொள்கை என்ன?
இதுவரையில் அவர்கள் ஒற்றுமை ஆட்சியைக் கவிழ்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே அன்றி நாட்டைப் பீடித்திருக்கும் கடுமையான கையூட்டு நோய், பொருளாதாரச் சிக்கல்கள், இன, சமய ஒற்றுமைகளின் வழிமுறைகள் என்ன என்பதை விளக்கி இருக்கிறார்களா?
அவர்களின் விளக்கம் மக்களுக்குத் திருப்தி அளிக்குமா? அவர்களின் கொள்கை, திட்டம் நாட்டின் பொருளாதாரச் செழுமைக்கு வழி காட்டுமா? இன, சமய ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பேதமையை ஆழமாக்குவதில் கவனம் கூடுமா? நல்லாட்சி, சட்டமுறை ஆட்சி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு முகைதீனும் ஹாடியும் பதில் தருவார்களா? விளக்கமளிப்பார்களா? இவர்களும் சரி இவர்களைப் போன்றவர்களும் குறை சொல்லுவதில் மிகுந்த கவனத்தைக் கொண்டுள்ளனர். நல்ல திட்டங்களை வெளிப்படுத்தவில்லை.
இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பும் போது ஆளும் ஒற்றுமை அரசும் தனது கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, மலேசியா ஒரு மதச் சார்பற்ற நாடு என நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பல முறை உறுதிபடுத்தியதை நினைவு கூர்ந்து ஒரு தெளிவான நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
நமது அரசமைப்புச் சட்டம் இஸ்லாம் கூட்டரசின் சமயம் என்று தெளிவுபடுத்துகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை எனும்போது மற்ற சமயங்களும் சுதந்திரமாக இயங்க அதே சட்டம் உறுதிப்படுத்துகிறது. இது எதைக் குறிக்கிறது? இஸ்லாம் தான் கூட்டரசின் சட்டம் என்றாலும் பிற சமயங்களும் இயங்கத் தடையில்லை. இதுவும் மதச் சார்பற்ற நிலையைக் குறிக்கிறது.
மதச் சார்பற்றது என்றதும் பலருக்குக் கிலி ஏற்படுவது ஏன்? தேவையற்ற காரணமில்லாத அச்சம். மதச் சார்பற்ற கொள்கை அல்லது நிலை என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டால் யாதொரு பிரச்சினைக்கும் இடமில்லை. மனிதநேயம்தான் முக்கியம். மனிதனின் கவுரவம் தான் முக்கியம். இவற்றை மறுப்பது, எதிர்ப்பது தான் கர்வம் என்பார்கள்.
மதச் சார்பற்ற நாடு என்றால் எல்லா மதங்களுக்கும் மதிப்பு உண்டு என்ற பொருளைக் கொள்ளலாமே. காலத்துக்கேற்ற மாற்றம் என்பது வியாக்கியானத்திலும் மாற்றம் தேவை.