அருள்திரு இயு ஹொங் செங், சனிக்கிழமை பேசியதில் தேசநிந்தனை கருத்து இருப்பதாக தெரியவில்லை. அரசமைப்பின் 153வது பகுதி தொடர்பில் சில முக்கிய விவகாரங்களை அவர் கவனப்படுத்தியுள்ளார், அவ்வளவுதான்.
இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, பெர்காசா மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் பக்குவம் பெற வேண்டும் என்றார்.
“பெர்காசா போலீஸ் புகார் செய்தது சரியில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு அந்த உரிமை உண்டுதான். ஆனால், போலீசுக்கு மேலும் முக்கியமான வேலையெல்லாம் இருக்கிறது.
“இயு பேசியதில் தேசநிந்தனை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் சில முக்கியமான விவகாரங்களைத் தொட்டுப் பேசியுள்ளார் அவர்.
“எதுவும் சந்தேகம் இருந்தால், விளக்கம் கூறுமாறு பாதிரியாரைக் கேட்டிருக்கலாம்”, என்று அந்த அரசமைப்பு நிபுணர் கூறினார்.
மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட 10-ஆண்டு ஆய்வு ஒன்று மலாய்க்காரர்கள் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.
மதமாற்றம் போன்ற விவகாரங்கள்தாம் அவ்வப்போது பிரச்னையை உண்டுபண்ணுகின்றன. ஆனால் அதுவும்கூட பிரச்னை ஊதிப் பெரிதாக்கப்படுவதைத்தான் பெரும்பாலும் பார்க்கிறோம் என்றாரவர்.
“பாதிரியார் மலாய்க்காரர்-அல்லாதவர், முஸ்லிம்-அல்லாதவர். அதனால்தான் அவரின் கருத்துகள் தேசநிந்தனை கொண்டவையாகக் கருதப்படுகின்றனவா? நாம் சுதந்திரம் பெற்று 55ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனாலும், இன்னும் அரசமைப்பு பகுதி 153-யைப் பாதுக்காக்கும் மனநிலையைத்தான் கொண்டிருக்கிறோம்.
ரீட் கமிசன், சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சட்டவிதிகளை நாடாளுமன்றம் மறு ஆய்வு செய்யலாம் எனறு பரிந்துரைத்தது. ஆனால் 55 ஆண்டுகளுக்குப் பிறகும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்”, என்றவர் சுட்டிக்காட்டினார்.
சனிக்கிழமை ஒரு நிகழ்வில் அரசமைப்புப் பகுதி 153 பற்றிப் பேசிய இயு, அது சிறுபான்மை இனத்தவரை அச்சுறுத்துகிறது என்று குறிப்பிட்டு மற்றவர்களின் உரிமைகள் பற்றியும் பேச வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.
முகைதின் எச்சரித்தார், பெர்காசா புகார் செய்தது
பகுதி 153, மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் அரசமைப்பு உத்தரவாதமளிக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுகிறது.
அது, சிறுபான்மை இனத்தவரை அச்சுறுத்துவதாகக் கூறுவது சரியில்லை என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
பெர்காசா, இயு-வுக்கு எதிராக நேற்று போலீசில் புகார் செய்தது.
அப்துல் அசீஸ், 1990களில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் நடந்துகொண்ட விதத்தைச் சுட்டிக்காட்டினார்.
“அம்னோ/பாரிசான் என்றால் விரும்பியதைச் செய்யலாம் என்கின்ற நிலை இருப்பதுபோல் தெரிகிறது.1983இலும் 1993-இலும் மகாதிர் ஆட்சியாளர்களை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தினார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
“ஆனால், மற்றவர்களால் அதைச் செய்ய முடியாது:செய்தால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவோம் ”, என்றாரவர்.