துபாயின் மக்கள்தொகை கடந்த 6 மாதங்களில் 50,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:-
துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இதன் காரணமாக துபாய்க்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது.
துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் மக்கள் தொகை குறைந்த போதிலும், அதனைத் தொடர்ந்து நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி இங்கு மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இதற்கு துபாய் அரசு கொரோனா பாதிப்பை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் காரணமாக துபாயில் மக்கள் தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் துபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது. நடவடிக்கை துபாயில் மக்கள்தொகை கடந்த 1960-ம் ஆண்டு இருந்ததைவிட நகர்ப்பகுதி 80 மடங்கும், கிராமப் பகுதிகளில் 170 மடங்கும் அதிகரித்துள்ளது.
அதிகரித்துவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வசதிக்கான தேவைகளும் அதிகரித்துள்ளதால் பொருளாதார மேம்பாடும் அதிகரித்துள்ளது. துபாய் நகர்ப்புற திட்டம் 2040-ன் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை மேம்படுத்தவும் வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-dt