பிள்ளைகளுக்கு எதிரான கொடுமைகள் கூடிவிட்டன

UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் பிள்ளைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் இடம்பெறுவதாகக் கூறியுள்ளது.

சண்டடை நடைபெறும் இடங்களில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆக அதிகமாகப் பதிவானது.

பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வேலையில் சேர்த்தல், பிள்ளைகளைக் கொல்லுதல், காயப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல்,
பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடைப்பட்ட பகுதி, காங்கோ குடியரசு, சோமாலியா ஆகிய இடங்களில் நடைபெறும் சண்டையால் பிள்ளைகள் பாதுகாப்பின்றி வாழ்வதாக நிதியம் குறிப்பிட்டது.

ஹெயிட்டி, நைஜீரியா, எத்தியோப்பியா, உக்ரேன் ஆகிய நாடுகளில் உள்ள பிள்ளைகளும் அவலநிலையில் வாடுவதாக அது சொன்னது. கடந்த ஆண்டு மட்டுமே பிள்ளைகளுக்கு எதிராக 27,000 விதிமீறல் சம்பவங்கள் பதிவாகின.

2021ஆம் ஆண்டில் பதிவான 24,000 சம்பவங்களைவிட அது அதிகம். 2005ஆம் ஆண்டு முதல் நிதியம் அவ்வகை விதிமீறல்களைக் கண்காணித்து வருகிறது.

அரசாங்கங்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பிள்ளைகளைப் பாதுகாக்க இன்னும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும் என்று ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் கேட்டுக்கொண்டது.

 

 

-ip