யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்) துணை வேந்தர் சாஹோல் ஹமிட் அபு பக்கார், பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் “பயன்படுத்திக்கொள்ள” இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கில் ஜனவரி 9-இல் தீர்ப்பளிக்கப்படுவதன் தொடர்பில், பிகேஆர் ஏற்பாடு செய்துள்ள பேபாஸ் அன்வார்901 (அன்வார் விடுவிப்பு)இயக்கத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று சாஹோல் ஹமிட் யுஐடிஎம் மாணவர்களுக்குக் “கடும் எச்சரிக்கை” விடுத்துள்ளார்.
“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் நோக்கம் கொண்ட எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாது என்று யுஐடிஎம் மாணவர்களை எச்சரிக்கிறேன்.
“யுஐடிஎம்-மில் 20,000மாணவர்கள் உள்ளனர். சிலர் அதில் கலந்துகொள்ளக்கூடும். சட்டவிரோதச் செயலில் ஈடுபடுமுன்னர் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்”, என்றவர் கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா கூறுகிறது.
நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சாஹோல் ஹமிட், மாணவர்களைத் தம் பிள்ளைகள்போல் கருதுவதாகக் கூறினார். சட்டவிரோத பேரணிகள் கட்டுப்பாட்டை மீறிய ஆர்ப்பாட்டங்களாக மாறிவிடுகின்றன என்றாரவர்.
துணை வேந்தர், இதற்குமுன் புத்ரா ஜெயாவில் மாணவர் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றபோது அதற்கு ஆதரவாக இருந்தார். அதற்குக் காரணம், அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதுள்ள அன்பைக் காண்பிக்கும் ஆர்ப்பாட்டம் என்றும் “மலாய் ஒற்றுமை”கருதி அதை ஆதரித்ததாகவும் அவர் சொன்னார்.