ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது

ரஷியாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன. சுமார் 20 டிரோன்களை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 17 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக ஏவுகணை மற்றும் தீவிர டிரோன் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இந்த போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள்

இதில் பள்ளிக்கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை இடிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாரணம் பெறுவதற்காக பள்ளிக்கூடத்தின் முன்பு காத்து நின்ற பொதுமக்கள் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் ஏவுகணைகள் மற்றும் 20 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வான் பாதுகாப்பு படையினரின் பணியை உக்ரைன் அரசாங்கம் பாராட்டி உள்ளது.

பதற்றம் அதிகரிப்பு

எனினும் இந்த டிரோன் தாக்குதலில் உக்ரைனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்தது. மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் முன்பகுதி சேதமடைந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் உக்ரைனில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

 

-dt