திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாக்கும் குற்றவியல் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் இன்று பெடரல் நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தெரிவித்தார்.
திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் வழக்கறிஞரான ஜெயரூபினி ஜெயராஜ், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 498 சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான பெண்களின் உரிமையை மீறுகிறது என்று வாதிட்டார்.
ஏனென்றால், தங்கள் திருமணத்தில் தலையிடும் ஒரு நபருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க கணவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரிவு உரிமை வழங்கியது.
இந்த விதி அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
திருமணங்களில் பெண்களுக்கு எதிரான இந்த விதி பாரபட்சமானது, ஏனெனில் இது பெண்களைத் தங்கள் கணவரின் சொத்தாகக் கருதுகிறது மற்றும் கணவர்களால் துஷ்பிரயோகம் செய்யத் வாய்ப்பளிக்கிறது என்றும் ஜெயரூபினி வாதிட்டார்.
“பாலினம்” என்ற வார்த்தையை உள்ளடக்கியதன் மூலம் கூட்டாட்சி அரசியலமைப்பின் 8 (2) வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தம், மலேசியாவின் சட்டமியற்றுபவர் என்ற முறையில், பெண்களும் ஆண்களும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும் மற்றும் சம உரிமைகள் இருப்பதைக் குறிக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், மலாயா தலைமை நீதிபதி முகமது ஜாபிடின் முகமது தியா மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் ஹர்மிந்தர் சிங் தலிவால், அபுபக்கர் ஜெய்ஸ், அப்துல் கரீம் அப்துல் ஜலீல் ஆகியோர் அடங்கிய பெடரல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
53 வயதான ஒரு தொழிலதிபர் 2020 இல் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிலாங்கூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமான பெண்ணை வசீகரித்ததற்காகப் பெண்ணின் கணவரால் போலிஸ் புகாரைப் பதிவு செய்ததற்காக 2018 இல் குற்றம் சாட்டப்பட்டார்.
தண்டனைச் சட்டம் பிரிவு 498ன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அந்த நபரின் விண்ணப்பம் அரசியலமைப்பில் உள்ள சமத்துவதிற்கு முரண்னானது என்பதால் அதை பெடரல் நீதிமன்றம்தான் தீர்க்க இயலும் என்பதால் வழக்கு பெடரல் நீதிமன்றதிற்கு வந்தது.
இதற்கிடையில், துணை அரசு வழக்கறிஞர் (DPP) யுசைனி அமர் அப்துல் கரீம், ஈயு கிம் சியாங்கின் உதவியுடன், பிரிவு 498 அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 8(1) (2) ஐ மீறவில்லை என்று சமர்பித்தார்.
இந்த விதி பாரபட்சமான சட்டம் அல்ல என்று கூறிய அவர், திருமணத்தில் இருக்கும் பெண்ணை ஆணுக்கு இணையாக வகைப்படுத்த முடியாது, குறிப்பாக வன்முறை மற்றும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு என்ற அம்சம் வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டுள்ளது.
498வது பிரிவின் நோக்கம், திருமணத்தைப் பேணுவதற்கான கணவரின் உரிமையைப் பாதுகாப்பதாகும் என்றார்.